புதுமாத்தளன் வைத்தியசாலையின் மீது படையினர் ஷெல் தாக்குதலை நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை : இராணுவ பேச்சாளர்
- புதுமாத்தளன் வைத்தியசாலை மீது படையினர் எக்காரணம் கொண்டும் ஷெல் தாக்குதலை நடத்தவில்லை. குறித்த வைத்தியசாலை உள்ளிட்ட அரசாங்கத்தால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலை நடத்த வேண்டிய அவசியம் படையினருக்கு இல்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுமாத்தளன் வைத்தியசாலையின் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலின் போது 18மாதக் கைக்குழந்தை மற்றும் வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதுடன் 300 பேர் படுகாயமடைந்ததாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தங்கமுத்து சத்தியமூர்த்தி சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கருத்து தொடர்பில் கேட்டபோதே பிரிகேடியர் மேற்கண்டவாறு கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ள வைத்திய அதிகாரி மேலும் கூறியுள்ளதாவது
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இறுதி வைத்தியசாலையாக மேற்படி புதுமாத்தளன் வைத்தியசாலை விளங்குகின்றது. அதன் மீது கடந்த புதன்கிழமை இராணுவத்தினர் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதன் போது வைத்தியசாலையின் பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
குறித்த தாக்குதல் நடத்தப்படும் போது மேற்படி வைத்தியசாலைக்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைகளுக்காக வந்திருந்தனர். இதன் போது திடீரென ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. இவை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தே வந்தன என்றார்.
இந்த தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்த இராணுவ பேச்சாளர் கூறியதாவது
இரு தரப்புக்குமிடையில் மோதல் இடம்பெறுகின்ற பட்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவென்றே அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதிக்குள் தங்கியுள்ள பொதுமக்கள் மீது இரு தரப்பும் தாக்குதல்களை நடத்தக்கூடாது என்பதே அரசாங்கத்தினதும் உலக நாடுகளினதும் வேண்டுகோளாகவும் உள்ளது. இந்நிலையில் குறித்த பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் படையினருக்கு இல்லை.
புதுமாத்தளன் வைத்தியசாலையின் மீது படையினர் ஷெல் தாக்குதலை நடத்தினர் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டிலும் எவ்வித உண்மையும் இல்லை. இதனை படையினர் முற்றாக மறுக்கின்றனர். படைத்தரப்பின் மீது வீணான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக விடுதலைப் புலிகளும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினரும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply