ஹைதியில் ‘மேத்யூ’ புயல் ருத்ர தாண்டவம்; டொமினிக்கன் குடியரசும் தப்பவில்லை; 11 பேர் பலி
லத்தீன் அமெரிக்க நாடான ஹைதியில் ‘மேத்யூ’ புயல் ருத்ரதாண்டவம் ஆடியது. டொமினிக்கன் குடியரசும் இந்த புயலுக்கு தப்பவில்லை. இரு நாடுகளிலும் 11 பேர் பலியாகினர்.‘மேத்யூ’ புயல்லத்தீன் அமெரிக்க நாடான ஹைதியை நேற்று முன்தினம் ‘மேத்யூ’ புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயல் காரணமாக மணிக்கு 140 மைல் வேகத்துக்கு அதிகமாக சூறாவளி வீசியது. பலத்த மழையும் பெய்தது. 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2010-ம் ஆண்டு அந்த நாட்டை தாக்கிய பூகம்பத்துக்கு பிறகு இது மிகப்பெரிய இயற்கை சீற்றம் என கருதப்படுகிறது.
‘மேத்யூ’ புயல் ருத்ரதாண்டவம் ஆடியதால் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோன்று தொலைபேசி, இணையதள சேவையும் முடங்கியது. பல நகரங்கள் உருக்குலைந்து போயின. கடலோரப் பகுதிகள் மூழ்கி விட்டன. இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது.
இந்த புயல் காரணமாக ஹைதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நாசமாயின. நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.ஐ.நா. கவலை
இந்த புயல் குறித்து ஐ.நா. பேரிடர் தடுப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் டெனிஸ் மெக்கிளின் கவலை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஹைதியில் மேத்யூ புயல் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. 2010-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டிராத நிலையில், இந்தப் புயல் ஹைதியை சின்னாபின்னமாக்கி விட்டது” என்றார்.டொமினிக்கன் குடியரசு
ஹைதியின் அண்டைநாடான டொமினிக்கன் குடியரசையும் ‘மேத்யூ’ புயல் ஒரு கை பார்த்தது. அங்கும் இந்தப் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலத்த மழை பெய்ததால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அங்கு 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு, முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.11 பேர் பலி
ஹைதி, டொமினிக்கன் குடியரசு ஆகிய இரு நாடுகளிலும் ‘மேத்யூ’ புயல் தொடர்பான சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விரு நாடுகளிலும் தாக்குதல் நடத்தி விட்டு ‘மேத்யூ’ புயல் கியூபாவுக்கு சென்றது. அங்கும் ‘மேத்யூ’ புயல் சேதங்களை ஏற்படுத்தினாலும், ஹைதி அளவுக்கு அந்த நாடு பாதிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
குவாண்டனாமோ நகர் அங்கு சற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அங்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களை நாடிச்சென்றனர்.அடுத்து அமெரிக்கா
‘மேத்யூ’ புயல் அடுத்து பஹாமாசை தாக்கிவிட்டு அமெரிக்காவில் புளோரிடா, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா மாகாணங்களை தாக்கும் என வானிலை ஆய்வு வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த மாகாணங்களில் இப்போதே அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு கரோலினா மாகாணத்தில் கடலோர மக்களை முழுமையாக வெளியேற்றி, முகாம்களில் தங்க வைப்பதற்கு அந்த மாகாண கவர்னர் நிக்கி ஹாலே நடவடிக்கை எடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply