முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல்களைக் கோரிய மனு தள்ளுபடி

jeyaமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இதுதொடர்பாக அவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “முதலமைச்சருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏன் என்றால், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆஸ்பத்திரி அறையில் வைத்து முதல்-அமைச்சர் ஆலோசனை செய்வதாக பத்திரிகைகளுக்கு செய்தி குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவிக்கொண்டே இருக்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அவ்வப்போது, முதல்-அமைச்சர் நன்றாக இருக்கிறார் என்று செய்திக் குறிப்பை மட்டும் வெளியிட்டு வருகிறது. புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதில்லை. இதனால் வதந்திகள் பரவி பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகிறது.

கடந்த 1-ந்தேதி தமிழக கவர்னர், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு ஒரு மனுவை அனுப்பினேன். அதில், தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட வேண்டும்.

பொதுமக்களின் நலன் கருதி, முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அறிக்கையாக வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

அதேபோல, முதல்-அமைச்சர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதல்-அமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்” என கூறியிருந்தார்.

இதனை உடனடியாக விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க தேவையில்லை என அரசு வழக்கறிஞர் வாதாடினார். இதையடுத்து அரசிடம் கலந்து ஆலோசித்து முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞரிடம் கூறிய நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமி மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் செய்திக் குறிப்புகளை மனுதாரர் பார்க்கவில்லையா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், விளம்பரத்திறக்காக டிராபிக் ராமசாமி இந்த வழக்கினை தொடர்ந்திருப்பதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply