மக்களின் காணிகளை படையினர் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது

HAKIMநல்லாட்சி அரசாங்கத்தில் பொது மக்களின் காணிகளை படையினர் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. வலி வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் வேகத்தில் கிழக்கிலும் படையினர் கையப்படுத்திய காணிகளை விடுவிக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள விவசாய காணிகளை வனபரிபாலன திணைக்களம் கையகப்படுத்தி வருவதாக கூறிய அவர் சிங்கள பகுதியில் ஒரு சட்டமும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் பிறிதொரு சட்டமும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் என்றும் குற்றஞ்சாட்டினார்.

 

காணி சுவீகரிப்புச்சட்ட கட்டளையை அங்கீகரிப்பது தொடர்பான விவகாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்க தீவிர நடவடிக்கை இடம்பெறுகிறது. காணி தொடர்பான விடயங்கள் தீவிரமாக கவனித்து காணி தொடர்பான அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய காணி ஆணைக்குழு இதுவரை நியமிக்கப்படவில்லை. இது யாப்பிலே ஒரு பிரிவாக உள்ளது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

 

காணிப் பிரச்சினைகள் நாடு பூராவும் உள்ளன. இது மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கிறது. காணிகள் சமமாக பகிரப்பட வேண்டும். அட்டாளைச்சேனையில் நாம் காணி பகிர்ந்தோம். கரையோர மக்களுக்கு பிரதேச செயலகங்களினூடாக சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இதனை வழங்கினோம்.

 

வனபரிபாலன திணைக்களம் அப்பாவி விவசாய மக்களின் காணிகள் தொடர்பில் நடந்துகொள்ளும் விதம் பிரச்சினைக்குரிய. யுத்தத்தின் பின்னர் புதுவிதமாக அவர்கள் நடந்துகொள்கின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் வனபரிபாலன திணைக்களம் பற்றைக் காடுகள் கூட காடுகளாக அறிவித்து தமது ஆளுமைக்கு கீழ் கொண்டு வருகிறது. விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

பெரும்பான்மை இன மக்கள் வாழும் பிரதேசத்தில் இவ்வாறான பிரச்சினை கிடையாது. சிறுபான்மையினருக்கு வேறு விதமான சட்டம் பின்பற்றப்படுகிறது. நல்லாட்சியில் இவ்வாறு பாகுபாடு இருக்கக்கூடாது.

 

பல வருடங்களாக நீடிக்கும் காணிப் பிரச்சினைகள் உள்ளன. தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையேயும் காணிப் பிரச்சினை உள்ளது. வட்டமடு காணிப் பிரச்சினையும் இரு சமூக தலைவர்களும் பேசி தீர்க்க வேண்டும்.

 

கடந்த ஆட்சியில் இதனைவிட தீவிரமாக சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தார்கள். ஆனால் அன்றிருந்த சுதந்திரம் கூட இன்றில்லை என மக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக உள்ள அத்தாட்சி ஆவணங்களை கணக்கில் எடுக்காது வனவள பரிபாலன திணைக்களம் செயற்படுகிறது. 2006 வர்த்தமானி அறிவித்தலை காட்டி இவ்வாறு செய்கின்றனர்.

 

அஷ்ரப் நகர காணிப் பிரச்சினை நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு ஜெனீவா தீர்மானத்துக்கும் அமைவாக படையினர் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

 

வலி வடக்கில் காணி விடுவிக்க காட்டும் தீவிரம் கிழக்கில் காணப்படவில்லை. இதேவேகத்தில் கிழக்கில் முப்படை கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க வேண்டும். வலி வடக்கில் காணிகள் விடுவிக்கப்படுவதை நாம் வரவேற்கின்றோம்.

 

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் தலைமையில் பல காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது. அதற்கு நன்றி கூறுகிறோம். அதேவேளை கிழக்கு காணி பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். புல்மோட்டை, அரிசிமலை பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இதனால் மோதல் நிலைகளும் ஏற்பட்டது.

 

மக்களுக்கு வழங்க இருந்த காணிகளை கடற்படை கையகப்படுத்தி படை முகாம் எல்லைகளை விஸ்தரித்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் படையினர் காணி சுவீகரிப்பதை ஏற்க முடியாது.

 

பாதுகாப்புக்கு குந்தகமாக படை முகாம்களை அகற்றுவதை நாம் கோரவில்லை. ஆனால் சகல இடங்களிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ள படை முகாம்களை அகற்றி மக்களின் சொந்தக் காணிகளை வழங்க வேண்டும்.

 

சிலாபத்துறை முழு நகரும் கடற்படை முகாமாக மாற்றியுள்ளது. கனிய வளம் உள்ள பகுதியாக உள்ள முள்ளிக்குளம் கூட படையின் கீழ் உள்ளது. விதவிதமான காரணங்களை காட்டி மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.

 

சுற்றுலா விடுதிகளை படையினர் நடத்தி வரும் நிலை இருக்கிறது இந்தப் பிரச்சினைளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply