‘ஜனாதிபதி ஆவதற்கான அடிப்படை நேர்மை, டிரம்பிடம் இல்லை’ ஒபாமா தாக்கு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வருவதால் அங்கு பிரசாரத்தில் அனல் வீசுகிறது.வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரசாரம் கூட்டம் ஒன்றில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து ஜனாதிபதி ஒபாமா பேசினார். அப்போது அவர் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பை கடுமையாக சாடினார். அப்போது அவர், ‘‘டிரம்பிடம் ஜனாதிபதி ஆவதற்கான இயற்கையான மனநிலை, அறிவு, அடிப்படை நேர்மை இல்லை. அறிவை அடைவதற்கான ஆசையும் இல்லை’’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசும்போது, ‘‘நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது என்னோடு குடியரசு கட்சி வேட்பாளர்கள் ஜான் மெக்கைன், மிட் ரோம்னி மோதி இருக்கிறார்கள். அப்போது எங்கள் இடையே நாட்டின் பொருளாதாரம், வெளியுறவு கொள்கைகள், சமூக பிரச்சினைகள் தொடர்பாக தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தன. அந்த தேர்தல்களில் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் விவாதித்தோம். ஆனால் உண்மை என்னவென்றால், நாங்கள் எல்லாருமே நாட்டு நலனில் நல்ல செயல்திட்டங்களை கொண்டிருந்தோம். அவர்கள் மதிப்புக்குரியவர்கள் அல்ல என்று நான் ஒருபோதும் கருதியது கிடையாது. ஆனால் டிரம்ப் ஜனாதிபதி ஆவதற்கான தகுதி கொண்டவர் அல்ல’’ என்று கூறினார்.
இதற்கிடையே டிரம்புக்கு சொந்தக்கட்சியான குடியரசு கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பெண்களுக்கு எதிரான அவரது கருத்து குறித்த வீடியோ வெளியான நிலையில், அவருக்கு அளித்து வந்த ஆதரவை பாராளுமன்ற சபாநாயகர் பால் ரேயான் வாபஸ் பெற்றார்.
இது குறித்து டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், ‘‘ஆதரவு இன்மையால் நான் சோர்வடைந்து விட்டேன். ஆனால், பால் ரேயான் போன்றவர்களின் ஆதரவு எனக்கு தேவையில்லை. உண்மை என்னவென்றால், நாம் ஆதரவை பெற வேண்டும் என்று கருதுகிறேன். ஆனால் பால் ரேயான் போன்றவர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை’’ என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply