ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு உச்சக்கட்ட அந்தஸ்து
சீனாவை ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில், அதிபர் ஜின்பிங்குக்கு ‘கோர்’ என்னும் உச்சக்கட்ட அந்தஸ்து வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடைத்துள்ளது.
சீன அதிபராகவும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகிப்பவர், ஜின் பிங் (வயது 63). ஆட்சியும், கட்சியும் அவரது கையில்தான் இருக்கிறது.
இந்த நிலையில் புதிதாக அவருக்கு உச்சக்கட்டமாக கட்சியில் ‘கோர்’ என்னும் ‘மைய’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பீஜிங் நகரில் நடந்த கட்சியின் 18-வது மத்திய கமிட்டியின் வருடாந்திர கூட்டத்தின் நிறைவில் இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதன்மூலம் கட்சியின் நிறுவனர் மாசேதுங் மற்றும் அவருக்கு பின் வந்த ஜியாங் ஜெமின் ஆகியோர் பெற்றிருந்த அந்தஸ்தை இப்போது ஜின்பிங் பெற்றிருக்கிறார்.
இந்த முடிவு, 2021-ம் ஆண்டு சீன கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறுகிறபோது, அனைத்து துறைகளிலும் மிதமான வளர்ச்சி கண்ட சமூகத்தை உருவாக்குவதற்கு வழி நடத்தும் என கூறப்பட்டுள்ளது. அதே போன்று 2049-ம் ஆண்டு சீன குடியரசு உருவானதின் நூற்றாண்டு விழாவின்போது, சீனாவை நவீன சோசலிச நாடாக உருவாக்குவதற்கும், இது உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசியல் நோக்கர்கள், ‘கோர்’ என்னும் உச்சக்கட்ட அந்தஸ்து என்பது எப்போதும் எதிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அல்லது மறுப்பு அதிகாரம் என்றே எடுத்துக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என கூறுகின்றனர்.
எனவே இந்த அதிகாரம் ஜின்பிங்கிற்கும் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
1989-ம் ஆண்டு மறைந்த சீன தலைவர் டெங் ஜியோவோபிங், மாசேதுங்கையும், ஜியாங் ஜெமினையும் குறிப்பிடுவதற்கு இந்த ‘கோர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
1990-களில் ஜியாங் ஜெமினைப் பற்றி குறிப்பிடுகிறபோது சீன உயர் மட்ட ஆவணங்கள், ஊடக அறிவிக்கைகள் எல்லாவற்றிலும் ‘கோர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஜின் பிங், இந்த ‘கோர்’ அந்தஸ்து பெற்றுள்ளதால், அடுத்த ஆண்டு கட்சி மாநாட்டின்போது நிர்வாக அளவில் செய்யவுள்ள மாற்றங்களில் முக்கிய பங்காற்றுவதற்கு வழிவகுக்கும் என பீஜிங்கில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
‘கோர்’ அந்தஸ்து உச்சக்கட்ட அந்தஸ்தாக அமைந்தாலும், பொதுச்செயலாளர் போன்று ‘கோர்’ என்ற அந்தஸ்து பற்றியோ, அதன் அதிகாரங்கள் பற்றியோ கட்சி ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply