ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைப்போன்று கருப்பு பண ஒழிப்பு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் ஜப்பானில் பிரதமர் மோடி அறிவிப்பு
கருப்பு பண ஒழிப்பு அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று ஜப்பானில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் நேற்று அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் டோக்கியோ நகரில் இருந்து கோபே நகருக்கு மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் ஷிங்கான்சென் புல்லட் ரெயிலில் பயணம் செய்தார்.
அந்த நாட்டின் 6–வது பெரிய நகரமான கோபே நகரில், இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்தியாவில் கருப்பு பண ஒழிப்புக்காக ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து நிலவுகிற சூழல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
அடுத்த அதிரடி
அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கு டிசம்பர் 30–ந் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. கணக் கில் வராத பணத்தை பதுக்கிவைத்திருப்பவர்களை சும்மா விட்டுவிட மாட்டோம். இது தொடர்பாக டிசம்பர் 30–ந் தேதிக்கு பிறகு மேலும் நடவடிக்கை இருக்காது என்று நான் கூற மாட்டேன்.
இந்த திட்டம் முடிவுக்கு வந்த பின்னர், உங்களை (கருப்பு பண முதலைகளை) தண்டிப்பதற்கு, புதிதாக வேறு திட்டம் அறிமுகம் செய்யப்படமாட்டாது என்று எந்த உத்தரவாதத்தையும் நான் தர மாட்டேன் என்பதை மீண்டும் அறிவிக்க விரும்புகிறேன். (கருப்பு பண ஒழிப்புக்காக அடுத்த அதிரடி திட்டம் தொடரும் என்பதையே இப்படி சூசகமாக குறிப்பிட்டார்.)
சுதந்திர காலம் முதல்…
கணக்கில் வராத பணத்தை பொறுத்தமட்டில், நான் சுதந்திர காலத்தில் இருந்து ஆவணங்களை சோதிப்பேன். அதற்காக எவ்வளவு பணியாளர்கள் தேவையென்றாலும், அவர்களை அமர்த்துவேன். நேர்மையானவர்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். கருப்பு பண முதலைகள் யாரையும் விட்டுவிட மாட்டோம்.
என்னை அறிந்தவர்கள், புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள், அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதை விட, கங்கை நதியில் போட்டுவிடுவது சிறந்தது என கருதுகிறார்கள். (செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் கங்கை நதியில் மிதக்கவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை அவர் இப்படி சுட்டிக் காட்டிப்பேசினார்.)
ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததும், தூய்மை திட்டம் போன்றுதான்.
மக்களை வணங்குகிறேன்
நான் நாட்டு மக்களை வணங்குகிறேன். அவர்கள் 4 மணி நேரம், 6 மணி நேரம் என்று வரிசையில் காத்திருக்கிறார்கள். 2011–ம் ஆண்டு பூகம்பம், சுனாமியால் ஏற்பட்ட பேரழிவை ஜப்பான் மக்கள் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, எப்படி ஏற்றுக்கொண்டு சமாளித்தார்களோ, அதே போன்று இந்த முடிவை (ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் ஒழிப்பு) நாட்டு நலனுக்காக இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த முடிவால் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை நான் நீண்ட காலம் யோசித்தேன். அதுமட்டுமல்ல. இந்த ரகசியத்தை காப்பதும் முக்கியம் என நினைத்தேன். இதை அதிரடியாகத்தான் செய்தாக வேண்டும். ஆனால் இதற்கு இந்தளவுக்கு ஆதரவும், வரவேற்பும் இருக்கும் என்று நான்
ஒருபோதும் எண்ணிப்பார்க்கவில்லை.
மக்கள் கஷ்டம்
ஒவ்வொரு இந்தியரையும் நான் வணங்குகிறேன். பல குடும்பங்களில் திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன. உடல் நலக்குறைவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆமாம். அவர்கள் அத்தனை அசவுகரியங்களையும் சந்தித்து வருகிறார்கள். இருப்பினும் அவர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு பிரிவினர் (எதிர்க்கட்சியினர்), எனக்கு எதிராக பேசுமாறு மக்களை தூண்டி விட முயற்சிக்கிறார் கள். ஆனால் மக்கள் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
சட்டம் என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும். மோடியின் 1,000 ரூபாய் நோட்டும் இனி பயன்படாது என்ற உண்மையை மக்கள் புரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.
‘எப்.டி.ஐ.’ புது இலக்கணம்
உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளிடையே இந்தியா வேகமாக வளர்ந்து வருகிற நாடு என்பதை உலகம் ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச நிதியம், உலக வங்கி என அனைவரும் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள்.
இந்தியா பிரகாசிக்கிற நட்சத்திரம் என்று சர்வதேச நிதியம் சொல்கிறது. இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது என உலக பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
அன்னிய நேரடி முதலீடான எப்.டி.ஐ.க்கு நான் சுயமாக இலக்கணம் வைத்திருக்கிறேன். எப்.டி.ஐ. என்பது பர்ஸ்ட் டெவலப் இந்தியா (முதலில் இந்தியாவை வளர்ச்சி அடையச்செய்ய வேண்டும்). அடுத்துத்தான் எப்.டி.ஐ. என்பது அன்னிய நேரடி முதலீடு. இந்தியா, வரலாற்று சாதனை அளவாக அதிகபட்ச அன்னிய நேரடி முதலீடுகளை பெற்று வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக எங்கள் அரசு ரூ.1¼ லட்சம் கோடி கருப்பு பணத்தை கண்டுபிடித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply