கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார் மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கடும் கண்டனம்
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’மத்திய அரசின் இந்த நடவடிக்கை சாதாரண மக்கள் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதல் ஆகும். இது கருப்பு சந்தையில் உள்ளோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்பப் பெறுவது பற்றிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு முன்பாகவே பஞ்சாப் மாநில பா.ஜனதாவின் சட்டப்பிரிவு தலைவர் சஞ்சீவ் கம்போஜ் புதிய ரூ.2,000 நோட்டுகளுடன் காணப்படுவது போன்ற காட்சி சமூக ஊடகங்களில் பரவி உள்ளது. நான் கூறுவது ஒன்றும் புதிய குற்றச்சாட்டு அல்ல.
கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் முடிய நாட்டின் அனைத்து வங்கிகளிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய காலாண்டு காலத்தில் மிகவும் குறைவாகவே வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அதுபற்றிய தகவலை பா.ஜனதா தனது கட்சிகாரர்களுக்கும், நெருக்கமான அனைவருக்கும் தெரிவித்து இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
கருப்பு பணம் ஒழிப்பு என்கிற பேரில் மிகப்பெரிய அளவில் ஊழல் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களிடம் கருப்பு பணம் இருக்கிறதா என்ன?…
இந்த வரிசைகளில் மிகப்பெரும் தொழில் அதிபார்களோ, கருப்பு பணத்தை பதுக்கியவர்களோ இருக்கிறார்களா என்ன?… பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பணம் எதுவும் வெளியே வரவில்லை.
வருமான வரி பிரகடன திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் பணம் மத்திய அரசின் கருவூலத்தில்தான் டெபாசிட் செய்யப்படவேண்டும். ஆனால் அதிக மதிப்புள்ள பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் குறிப்பிட்ட சிலருடைய பணம் மட்டும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி, சரத்பவார், சுபாஷ் சந்திரா, பாதல் ஆகியோர் கருப்பு பணத்தை குவித்து இருக்கிறார்களா? அல்லது விவசாயிகள், ரிக்ஷா இழுப்போர், கடைக்காரர்கள், தொழிலாளிகள் கருப்பு பணம் வைத்திருக்கின்றனரா?…
எனவே, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்கூட்டியே பா.ஜனதா தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு இதுபற்றிய தகவலை தெரிவித்து அவர்கள் கருப்பு பணத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியிருக்கவேண்டும்.
செல்லாத நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு அதிக கமிஷன் பெற்றுக் கொண்டு அவற்றை வீடுகளுக்கே கொண்டு வந்து கொடுப்பதும் ஒரு பக்கம் நடக்கிறது. பெரும் அளவு தொகைகளுக்கு இந்த தரகு வேலை நடக்கிறது.
இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது? இப்படி கமிஷனை பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதிலாக அதை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.
இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். கருப்பு பணமும் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். இன்று ஒரு அமெரிக்க டாலரை ரூ.120 கொடுத்து வாங்குகின்றனர். தற்போது 10 கிராம் தங்கம் ரூ.30 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. இதை மக்கள் இனி ரூ.60 ஆயிரம் கொடுத்து வாங்கும் நிலைமை ஏற்படும். கருப்பு பணம் பதுக்கியவர்கள் சொத்துகளையும் வாங்குகின்றனர். எனவே கருப்பு பணம் அதிகரிக்கத்தான் செய்யும்.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டு இருந்தால் அதற்காக மத்திய அரசை பாராட்டலாம். ஆனால், புதிய ரூ.2,000 நோட்டை வெளியிட்டதில் கருப்பு பண பிரச்சினை தீருமா?… என்பது கவனத்தில் கொள்ளப்படவில்லை. புதிய ரூ.2000 நோட்டு ஊழலுக்கும் கருப்பு பணத்துக்கும்தான் வழி வகுக்கும்.
ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுபவர்களுக்கு 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு என்ன அர்த்தம்?… மக்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டாம் என்பதுதானே?… வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் வெளியே நீண்ட கியூ வரிசையில் நிற்பவர்கள் யார்?… குடும்பத் தலைவிகள், சிறுவணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள்தான். இவர்கள் யாரும் வரி ஏய்ப்பு செய்ய மாட்டார்கள்.
ஏழை, எளிய மக்கள் தங்களது மகள்களின் திருமணத்துக்காக கடந்த 10 வருடங்களில் சிறுகச் சிறுக ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சேமித்து வைத்து இருப்பார்கள். அதற்கு அபராதம் விதித்தால் எப்படி? கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார்.
தவிர அதிக அளவில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு ஏ.டி.எம்.களில் வைப்பதற்கு ஏற்ப அவை வடிவமைக்கப்படவில்லை. இது நமக்கு தெரிகிறது. இதை அவர்களும் நன்றாகவே அறிவார்கள். எனினும் வேண்டும் என்றே நெருக்கடியை உருவாக்குவதற்காக இப்படி செய்து இருக்கின்றனர். எனவே பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இந்திய தொழில் அதிபர்களின் உண்மையான கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது. பிரதமர் ஆவதற்கு முன்பு மோடி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவேன் என்று உறுதிமொழி அளித்தார்.
ஆனால் இதுவரை இந்த விஷயத்தில் எதுவும் செய்யவில்லை. எனவே கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் முதலில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கும் இந்தியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply