இன்று அல்லது நாளை முதல் ஏடிஎம்களில் 2000 ரூ. நோட்டு கிடைக்கும்
நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களில் கூடுதல் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பொருளாதார விவகார அமைச்சக செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என செவ்வாய்க்கிழமையன்று (8.11.2016) அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சக்திகாந்த தாஸ், ஏடிஎம்களில் இது வரை நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2000 ரூபாய் எடுக்கலாம் என்பது 2500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வாரத்துக்கு வங்கிகளில் காசோலை மூலம் எடுக்கப்படும் அதிகபட்ச பணம் 20, 000 ரூபாய் என்பது 24, 000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
புதிய 2000 ரூபாய் பணத்தை ஏடிஎம்களில் எடுக்கும் வகையில் ஏடிஎம்களில் தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இன்றோ அல்லது நாளையோ ஏடிஎம்கள் மூலம் புதிய 2000 ரூபாய் பணத்தை மக்கள் எடுக்க முடியும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்த வரும் நவம்பர் 24-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சக்திகாந்த தாஸ், வணிகர்கள் மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருப்போர் வங்கி கணக்குகளில் இருந்து வாரத்துக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் அதிக அளவில் மைக்ரோ ஏடிஎம்கள் நிறுவப்படும் என்று கூறிய சக்திகாந்த தாஸ், போதுமான பணம் வங்கிகளிடம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply