ஈரானில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதல்; 31 பேர் பலி 52 பேர் படுகாயம்

Iran ஈரான் நாட்டில் நின்று கொண்டிருந்த ஒரு பயணிகள் ரெயில் மீது மற்றொரு பயணிகள் ரெயில் மோதி கோர விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 31 பேர் பலியாகினர். 52 பேர் படுகாயம் அடைந்தனர். ஈரான் நாட்டில் டாப்ரிஸ் நகரில் இருந்து, வடகிழக்கு நகரமான மஷாத் நோக்கி நேற்று ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

 

இதேபோன்று செம்னான் நகரில் இருந்த மஷாத் நகருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த மற்றொரு பயணிகள் ரெயில், ஹாப்த்கான் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. இந்த இடம், டெக்ரான் நகரில் இருந்து 216 கி.மீ., தொலைவில் உள்ளது.

 

நின்று கொண்டிருந்த அந்த ரெயில் மீது, டாப்ரிஸ் நகரில் இருந்து வந்துகொண்டிருந்த ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த மோதலை தொடர்ந்து 4 பெட்டிகள் கவிழ்ந்தன. அவற்றில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. பயணிகள் மரண ஓலமிட்டு கதறினர்.

 

மீட்பு பணியில் தாமதம்

 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தும், கடுமையான உறைபனி காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் உடனடியாக செல்ல இயலவில்லை. இதையடுத்து மீட்பு படையினர் ஒரு ஹெலிகாப்டர் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீயணைக்கும் படையினரும் அங்கு குறித்த நேரத்தில் சென்றடைய முடியவில்லை. தாமதமாக அவர்கள் சென்றனர். எரிந்து கொண்டிருந்த பெட்டிகளை அவர்கள் போராடி அணைத்தனர்.

 

இடிபாடுகளில் சிக்கித்தவித்த பயணிகளை மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 

31 பேர் பலி

 

இருப்பினும் இந்த சம்பவத்தில் 31 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

இந்த கோர விபத்து தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, “ஹாப்த்கான் ரெயில் நிலையத்தில் நேரிட்ட ரெயில் விபத்தில் 31 பேர் பலியாகி விட்டனர். 52 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனாலும் அவர்களில் சிலரது நிலை மோசமாக இருக்கிறது, எனவே உயிர்ப்பலி மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது” என கூறினர்.

 

இந்த விபத்து காரணமாக அந்த தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.

 

இந்த விபத்துக்கு காரணம் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply