எத்தனை அம்புகள் பாய்ந்தாலும் திராவிட இயக்கத்தை யாராலும் நசுக்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. இளைஞரணி சார்பில் நீதிக் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:-
திராவிட இயக்கம் என்ன சாதித்தது என்பதற்கு இந்த மேடையும் அரங்கமும்தான் அடையாளம். இந்த மேடையில் இருப்பவர்கள் நேரம் பார்க்காமல் எந்த குலத்தில் பிறந்திருக்கிறார்கள் என்ற பேதம் பார்க்காமல், மனித குலத்துக்கு என்ன செய்கிறார்கள் என்பதைத் தான் நாம் பார்க்கிறோம்.
அதுதான் இந்த நூற்றாண்டு விழாவின் சிறப்பு, தமிழகம் இன்று கண்டிருக்கக் கூடிய மிகப்பெரிய வெற்றி என்பதை நான் பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
போக்குவரத்து கழகங்களை அரசுடமையாக்கியது, தமிழை செம்மொழியாக மாற்றி தந்தது, சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்தது, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழரின் உரிமைக்கும் என்றைக்கும் துணை நிற்பது திமுக தான். மனிதனை மனிதனே இழுக்கக்கூடிய கை ரிக்ஷாக்களை ஒழித்த தலைவர் நம்முடைய தலைவர்.
தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லங்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருநங்கை எனப்பெயர் சூட்டி அவர்களின் உரிமைகளை பாதுகாக்கப்பட்டது, உடல் உறுப்பு பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் எனப் பெயர் சூட்டி அவர்களுக்கென தனி துறையை உருவாக்கியவர் நம் தலைவர்.
இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தில் ‘‘ஒன்றே குலம்’’ என்ற உணர்வோடு வாழ்ந்திட, நாடெங்கும் சமத்துவபுரங்களை அமைத்து தந்தை பெரியார் பெயரிலே அமைத்து தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் தான்.
நம்முடைய இந்திய நாட்டில் பல குடியரசு தலைவர்களையும், பல பிரதமர்களையும் உருவாக்கிய இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். அப்படிப்பட்ட இந்த திராவிட இயக்கத்தை தான் சிலர் நசுக்கி விட வேண்டுமென பல செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். இது வரை அது பலித்தது இல்லை. இனிமேலும் அது பலிக்கப் போவதும் இல்லை.
எத்தனை அம்புகள் நம்மை நோக்கி பாய்ந்தாலும் திராவிட இயக்கத்தை எதனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், திராவிட இயக்கம் இயக்கம் என்பது அதனின் அடையாளமாக விளங்குவது திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். இது ஆயிரங்காலத்து பயிர். யாரும் எளிதிலே அறுவடை செய்துவிட முடியாது.
அந்த திராவிட இயக்கத்தில் தேர்தல் பாதையில் ஒருவழித்தோன்றலாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகமும் நிச்சயம், உறுதியோடு சொல்கிறேன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். பெண்ணுரிமைக்கு இலக்கணமாக, சமூக நீதிக்கு அடையாளமாக இருக்கும் தி.மு.கழகம் என்றைக்கும் தமிழ் மொழிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் முழு மூச்சோடு தொடர்ந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply