‘வார்தா’ புயல் தாக்கும் அபாயம்: சென்னை, காஞ்சீபுரத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை
சென்னை அருகே இன்று கரையை கடக்க இருக்கும் ‘வார்தா’ புயலை சமாளிப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசர ஆலோசனை கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய்துறை செயலாளர் சந்திரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், பேரிடர் மேலாண்மை இயக்குனர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய்த் துறை செயலாளர் சந்திரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
‘வார்தா’ புயலால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள சென்னை, காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு தலா 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 160 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். காஞ்சீபுரத்தில் ஒரு பேரிடர் மீட்பு குழுவில் 40 வீரர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் காவல் துறையில் துடிப்புமிக்க இளைஞர்களும், மீட்பு பணியில் பயிற்சி பெற்ற 1,300 பேர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். மக்களை மீட்க படகுகள் உள்ளிட்ட அனைத்து மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. புயலை சமாளிக்க தமிழக அரசு 100 சதவீதம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
கடந்த காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலான மீட்பு குழுவினர் அங்கு தயார் நிலையில் உள்ளனர். மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை, குடிநீர் சப்ளை போன்றவற்றிற்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புயல் தாக்கும் என்ற காரணத்தால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர மீட்பு குழு கடலுக்கு விரைந்துள்ளது. புயல் தாக்கம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ள 32 வருவாய் மாவட்டங்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply