வார்தா புயல் எதிரொலி: பேயாட்டம் போடும் மரங்கள், சென்னையில் கனமழை
சென்னைக்கு கிழக்கே சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள வார்தா புயல் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் சென்னையை வார்தா புயல் நெருங்கும்போது மணிக்கு சுமார் 120 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று மாலைக்குள் சென்னையை கடந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒங்கோலை நோக்கி செல்லும் புயலின் எதிரொலியாக கடல் சீற்றத்துடனும், கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்தா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றின் வேகத்தால் பெரிய மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து கிடக்கின்றன. சென்னை நகரின் சில முக்கிய சாலைகள் மழைநீர் தேங்கியுள்ளது.
பழவேற்காடு பகுதியில் கடலோரத்தில் உள்ள மீனவ குப்பங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால், சில வீடுகள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. இங்குள்ள கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 படகுகள் சேதம் அடைந்தன.
சென்னை கடற்கரை – தாம்பரம், சென்ட்ரல் – ஆவடி, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில் சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் பகுதியில் பலத்த காற்றுடன், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே புறப்பட்டுச் செல்கின்றன.
பிற்பகலில் இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply