அலெப்போ நகரில் அரசுப்படைகள் ஆவேச தாக்குதல் : 60 பேர் பலி
சிரியாவில் போராளிகள் வசம் சிக்கியுள்ள அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களை மீட்பதற்காக ரஷிய விமானப்படையின் உதவியுடன் அரசுப் படைகள் சமீபகாலமாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலின் எதிரொலியாக போராளிகள் பின்வாங்க தொடங்கியுள்ளதால் அரசுப் படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்களே அதிகம் கொல்லப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனால், அலெப்போ நகரவாசிகளில் பலர் உயிர்பயத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 40 ஆயிரம் மக்கள் இவ்வாறு வெளியேறியுள்ள நிலையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் தங்களது வீடுகளில் இருந்து மாற்றிடங்களை நோக்கி சென்றதாக அங்குள்ள போர் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அலெப்போவில் இருந்து வெளியேறிய சுமார் 60 ஆயிரம் பேர் சுற்றுப்பட்டு பகுதிகளில் உள்ள செம்பிறை அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிரியாவில்.., குறிப்பாக, அலெப்போ நகரில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும். போரால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் நிவாரண உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் கனடா நாட்டின் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஐ.நா.சபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 122 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
சீனா, ரஷியா, ஈரான், சிரியா உள்பட 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட 36 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நிராகரித்தன.
ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அலெப்போ நகரை எப்படியும் மீட்டேதீர வேண்டும் என போராளிகள்மீது வான்வழியாகவும், பீரங்கிகளாலும் அரசுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த ஒருவார காலமாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தாக்குதலின் விளைவாக அலெப்போவில் போராளிகள் வசமிருந்த பர்தவுஸ், புஸ்டான் அல் கஸ்ர், சிப்டியா ஆகிய பகுதிகளை அரசுப்படைகள் மீட்டுள்ளன. அருகாமையில் உள்ள ஷேக் சயீத் மாவட்டமும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் நேற்று அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 60-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக இங்கு உள்நாட்டுப் போர் நிலைமைகளை கண்காணித்து வரும் பிரிட்டன் நாட்டு முகமை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply