ராஜீவ் கொலை விசாரணை: பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ராஜீவ் கொலை குறித்து சிறப்பு பல்நோக்கு விசாரணை முகமை நடத்தி வரும் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க கோரும் பேரறிவாளன் மனுவின் மீது 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அந்நிய நாடுகளிலும் குற்றவாளிகள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. இதனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்த பின்னர், சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்டு சிறப்பு பல்நோக்கு விசாரணை முகமையை 1997-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது. இந்த அமைப்பு ஒவ்வொரு மாதமும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த ரகசிய அறிக்கையை, சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்சு (தடா) கோர்ட்டில் தாக்கல் செய்து வருகிறது.

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சென்னை தடா கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘ராஜீவ்காந்தி கொலை குறித்து சிறப்பு பல்நோக்கு விசாரணை முகமை விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே அந்த அமைப்பின் விசாரணையை இந்த கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். அந்த விசாரணையை துரிதப்படுத்தவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறியவும் அந்த அமைப்புக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தடா கோர்ட்டு, இதனை விசாரிக்க தங்களுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிவித்தது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு பல்நோக்கு விசாரணை முகமை 19 ஆண்டுகளாக எவ்வித இலக்கும் இன்றி செயல்பட்டு வருகிறது. சி.பி.ஐ. தரப்பில் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை அமைப்புக்காக இதுவரை பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விசாரணையில் என்னை பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்ற தகவல் இன்றி முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் சிறப்பு பல்நோக்கு விசாரணை முகமையின் செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பேரறிவாளன் தாக்கல் செய்த இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் மனுவின் மீது 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply