125 ஆண்டுகளில் 500 புயல்கள்: கதிகலங்கிய வங்காள விரிகுடா – அதிக பாதிப்புக்குள்ளான ஒரிசா

வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கடந்த 125 ஆண்டுகளில் சுமார் 500 புயல்கள் தாக்கியதாகவும் இவற்றில் ஒரிசா மாநிலத்தை தாக்கிய 107 புயல்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. ஒரிசா மாநில தலைநகரான புவனேஸ்வரில் உள்ள இந்திய தொழில்நுட்பவியல் பயிலகத்தில் புவி, பெருங்கடல், பருவநிலைத்துறை பேராசிரியரான உமா சரண் மொஹாந்தி என்பவர் இதுதொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது;-

கடந்த 1891-ம் ஆண்டில் இருந்து 2016 வரை 125 ஆண்டுகளில் சுமார் 500 புயல்கள் வங்காள விரிகுடா கடல்பகுதியை ஒட்டியுள்ள இடங்களை தாக்கியுள்ளன, இவற்றில் சக்திவாய்ந்த 18 புயல்கள் 5 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை உண்டாக்கியுள்ளன. ஒரிசா மாநிலத்தை தாக்கிய 107 புயல்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தின.

பசிபிக் பெருங்கடல் பகுதியை தாக்கும் பெரும்புயல்களைவிட வங்காள விரிகுடா பகுதியை தாக்கும் புயல்கள் சக்திகுறைவானவை, எனினும், அதிகமான உயிரிழப்புகளையும், நாசத்தையும் இங்கு தாக்கும் புயல்கள் உருவாக்கி விடுகின்றன.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 80 முதல் 90 புயல்கள் பல பகுதிகளை தாக்கி வருகின்றன, இவற்றில் ஏழு சதவீதம் அளவிலான புயல்கள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதியை தாக்குகின்றன. பருவநிலை மாற்றத்தால் தற்போது தாக்கும் புயல்கள் மிகப்பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்தி விடுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply