சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது: சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது.ஜல்லிக்கட்டை பொறுத்த வரை காங்கிரசாக இருந்தாலும் சரி, பா.ஜனதாவாக இருந்தாலும் சரி ஆளும் போது அந்த கட்சிகளின் தமிழ்நாட்டு தலைவர்களின் கருத்து ஒரு மாதிரியாகவும், தேசிய தலைவர்கள் கருத்து வேறுமாதிரியாகவும் இருக்கிறது.தற்போது தமிழிசை சவுந்தரராஜன், பொன். ராதா கிருஷ்ணன் போன்றோர் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்கின்றனர். ஆனால் டெல்லி தலைவர்கள் அதை புரிந்து கொள்கிறார்களா? என்று தெரியவில்லை.

காளைகளை காட்சி படுத்தும் பட்டியலில் சேர்த்ததே தவறு. எனவே அவசர சட்டம் இயற்றியாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். ஆனால் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை.

இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்பதில் நம்பகத்தன்மை இல்லை. கடந்த ஆண்டு இதே போல் இருந்து ஏமாற்றமே மிஞ்சியது.

ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டாக பார்க்க முடியாது. அது நமது தேசிய இனத்தின் பண்பாடு. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நாட்டு மாடு இனத்தை அழிக்கும் முயற்சியாகவே நாங்கள் இதை பார்க்கிறோம்.

தற்போது பா.ஜனதா தலைவர்கள் நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முயன்ற அளவு முயற்சி செய்வோம். கோர்ட்டு உத்தரவை எங்களால் மீற முடியாது என்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களில் அமைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்ட போது, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை அறிவித்தன. கர்நாடகா அறிவிக்கவில்லை.

அப்போது மத்திய அரசு இந்த விவகாரத்தில் நிர்வாகத்தில் தலையிட வேண்டாம் என கோர்ட்டில் கூறியது. ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மட்டும் இது போல் கோர்ட்டு தலையிட வேண்டாம் என்று சொல்ல மறுக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் அடிப்படையாக சில பிரச்சனைகள் உள்ளன. மத்திய அரசு ஆண்டுக்கு 24 லட்சம் டன் மாட்டு கறியை ஏற்றுமதிசெய்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மட்டும் காளைகளை வதைக்க கூடாது என்கிறார்கள்.

காளை இனங்களை காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்க்கும் போதே தடுத்து இருக்க வேண்டும். வேறு பெயர்களிலாவது ஜல்லிக்கட்டை நடத்தலாம் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் மதுரையில் நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காளைகளை வைப்பதற்கு கூட அனுமதி மறுத்து விட்டனர்.

பிறகு எப்படி வேறு பெயர்களில் நடத்த முடியும். எனவே தடையை மீறியாவது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம்.

ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டதில் மக்களுக்கு பல கேள்விகள் உள்ளது. பல கோடி மக்களுக்கு முதல்- அமைச்சராக திகழ்ந்தவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரம் வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும் என மக்கள் கருதுகிறார்கள்.

ஜெயலலிதாவால் சரியாக பேச முடியாத நிலை இருந்தது, அதனால் அவர் பேசவில்லை என கூறுகிறார்கள். ஆனால் சங்கீதா ரெட்டி போன்றோர் ஜெயலலிதா எங்களிடம் பேசியதாகவே கூறியிருந்தார்கள். அவரை குரல் அழைப்பு மூலமாக பேச வைத்து இருக்கலாம்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் அரசின் முறையற்ற நிர்வாகம் வெளிப்படுகிறது. தற்போது தான் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடப்பதாக சக்திகாந்த தாஸ் கூறுகிறார். முதலில் 2 ஆயிரம் நோட்டுகளை வெளியிட என்ன தேவை இருக்கிறது?

சமஸ்கிருத திணிப்பு, காவி கொடி தவிர அந்த நோட்டில் எதுவும் இல்லை. பணத்தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் கூட்டுறவு வங்கிகளில் பணம் இல்லை. ஆனால் தனியார் நிறுவனத்தில் போய் பணம் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். தனியாரால் செய்ய முடிந்த நிர்வாக கட்டமைப்பை அரசால் செய்ய முடியாதது ஏன்?

சசிகலா அ.தி.மு.க.பொதுச்செயலாளராக வேண்டும் என்பதை அவர்களது பொதுக்குழு, செயற்குழு முடிவு செய்யும். சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவதையோ, முதல் – அமைச்சர் ஆவதையோ யாரும் தடுக்க முடியாது. அவர்களது கட்சியினர் அதை விரும்புகிறார்கள்.

தற்போது ஆர்.கே. நகர் காலியாக இருக்கிறது. அதில் அவர் போட்டியிட்டு கூட வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. தி.மு.க. தலைவரை பார்க்க சென்ற வைகோ கார் மீதான தாக்குதல் சம்பவம் வருந்ததக்கது. மனித மாண்புகளுக்கு பண்பாட்டுக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply