பெர்லின் ‘டிரக்’ தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு; மர்மநபர் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானை சேர்ந்தவர்

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டிற்குள் லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பெர்லின் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்துச் செல்லும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் தான் ஓட்டிவந்த ‘டிரக்’கை ஓட்டிஉள்ளார். இதில் பொதுமக்களில் 12 பேர் உயிரிழந்தனர்.

 

40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘டிரக்’ தாக்குதலை அடுத்து மார்க்கெட் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் விரைந்தது. பாதுகாப்பு படையினர் அப்பகுதி முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ளனர். கடந்த ஜூலையில் பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனத்தை ஓட்டி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டனர், இச்சம்பவத்தை பெர்லின் தாக்குதல் நினைவுபடுத்தி உள்ளது. ஜெர்மனி உள்துறை மந்திரி தாமஸ் டி மசியர் பேசுகையில், “பயங்கரவாத தாக்குதல் என்ற வார்த்தையை பிரயோகிக்க இப்போது நான் விரும்பவில்லை, ஒன்றை சுட்டிக் காட்ட பல்வேறு விஷயங்கள் உள்ளது,” என்று கூறிவிட்டார். இதற்கிடையே சம்பவத்தினை நேரில் பார்த்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுற்றுலா பயணி திரிசா ஒ’நீல் பேசுகையில், பெரிய கருப்பு நிறத்தினால டிரக் வேகமாக மார்க்கெட் பகுதியை நோக்கி வருவதை பார்த்தேன், டிரக் அப்பகுதியில் நின்றவர்கள் மீது மோதியது. பின்னர் அனைத்து விளக்குகளும் அணைந்துவிட்டன. அனைத்தும் அழிக்கப்பட்டது.

 

அழுகை சத்தத்தை கேட்டேன், நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். எங்கு பார்த்தாலும் இரத்தமும், சடலமுமாக காணப்பட்டது என்றார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜெர்மனி போலீசார் டிரக்கை ஓட்டிய ஒருவரை கைது செய்து உள்ளனர். இதற்கிடையே டிரக்கை ஓட்டிய மர்ம நபர் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஜெர்மனி பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே சிறு குற்றங்களை செய்ததினால் காவல்துறையினால் அறியப்பட்டவர் என்றும் அவருக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்றும் ஜெர்மனி பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. இச்சம்பவத்தினை அடுத்து ஜெர்மனி தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நகரில் மோசமான நிலையானது நிலவவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, இருப்பினும் இதற்கு பின்னணி என்ன என்பது தெரியவரவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply