35 தூதரக அதிகாரிகள் வெளியேற அமெரிக்கா உத்தரவு: பதிலடி கொடுக்க ரஷ்யா உறுதி
அமெரிக்காவில் சமீபத்தில் முடிந்த அதிபர் தேர்தலின்போது, கணினிகளில் ஊடுருவி ரகசிய தகவல்களைத் திருடி, தேர்தலின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா மீது அமெரிக்கா புகார் கூறி வரும் நிலையில், ரஷ்யாவின் 35 தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் பதில் நடவடிக்கை, அமெரிக்காவுக்கு பெருமளவு அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் வரை காத்திருக்கப் போவதாக ரஷ்யா குறிப்புணர்த்தியுள்ளது. ரஷ்யா கணினி தகவல்களைத் திருடியதாகக் கூறப்படும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டை டிரம்ப் புறந்தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.தங்கள் நாட்டின் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திலும், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள துணைத் தூதரகத்திலும் உள்ள 35 ரஷ்ய தூதரக அதிகாரிகளும் 72 மணி நேரத்துக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இரண்டு ரஷ்ய புலனாய்வு அமைப்புக்களான ஜிஆர்யு, எஃப்எஸ்பி உள்பட ஒன்பது நிறுவனங்கள் மற்றும் தனியார் மீதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியுயார்க் மற்றும் மேரிலேண்டில் ரஷ்ய உளவு நிறுவனங்கள் பயன்படுத்திய இரு வளாகங்களை அமெரிக்கா மூட உள்ளது.
அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக இணையத் தகவல் திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட ரஷ்யா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஒபாமா எச்சரித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply