இலங்கை அரசிடம் உள்ள 122 படகுகளை மத்திய அரசு மீட்க வேண்டும்: ராமதாஸ்
தமிழக மீனவர்களின் படகுகளை நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இலங்கை அரசிடம் இருந்து 122 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 122 விசைப்படகுகளும், அவற்றில் இருந்த மீன்பிடி கருவிகளும் அரசுடைமையாக்கப்பட்டு விட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழக மீனவர்களிடம் இருந்து கடந்த சில ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடமை ஆக்கியதன் மூலம் அப்படகுகளை தங்கள் மீனவர்களுக்கு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்வதற்கான துணிச்சலை வழங்கியதே இந்தியா என்பது தான் கவலையளிக்கும் விஷயமாகும். வழக்குகள் இன்னும் முடியாத நிலையில் இலங்கை அரசு தன்னிச்சையாக படகுகளை நாட்டுடைமை ஆக்கியிருப்பதை ஏற்க முடியாது. இதை இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
ஒவ்வொரு படகும் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக் கூடியவை இதன் மூலம் 3,050 குடும்பங்கள், அதாவது 15,250 பேரின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த இழப்பை மீனவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே, இலங்கை அரசிடம் உள்ள 122 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படகுகளை இழந்த மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய படகுகளை வாங்கித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு விஷயங்களில் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கியுள்ளதும் மோடி அரசின் தோல்விக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்காமல் இலங்கை அரசு அறிவிப்பை திரும்பப்பெற அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply