வில்பத்து விடயத்தில் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தியுள்ளனர் : ரவூப் ஹக்கீம்
சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில், பௌத்த வழிபாட்டுத் தளங்கள் அங்கு காணப்பட்டதற்கான நினைவுச் சின்னங்களும், தடயங்களும் இருப்பதாக கூறிக்கொண்டு சில பேரினவாத, தீவிரவாத சக்திகள் மேற்கொண்டு வரும் முஸ்தீபுகளினால் இனங்களுக்கிடையிலான முறுகல்களும்,விரிசல்களும் அதிகரிப்பதற்கான அச்சம் நிலவுவதாக பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நெஸெபி பிரபுவிடத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
இந்த பரபரப்பான நிலைமையை அரசாங்கம் உரிய முறையில் தலையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியது அவசியமென்றும் நெஸெபியிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நெஸெபி நேற்று நண்பகல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர
திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில்சந்தித்து கலந்துரையாடினார்.
அமைச்சர் இது தொடர்பில் பிரபுவிடம் மேலும் கூறியதாவது,
முன்னொருபோதும் இல்லாதவாறு சிறுபான்மை மக்கள் நூற்றாண்டு காலங்களாக பாரம்பரியமாக வசித்து வரும்
பிரதேசங்களில் தமது வழிபாட்டுத்தலங்கள் இருந்துள்ளன எனக்கூறிக்கொண்டு அரசாங்கத்தை திசைதிருப்பும் வகையில் சமயம் சார்ந்த தீவிர சிந்தனைப் போக்குள்ள ஒரு சாரார் தடயங்களைத் தேடிக்கண்டு பிடிக்கும் கைங்கரியத்தில்
இறங்கியிருக்கின்றார்கள்.
வில்பத்து வனப்பிரதேசத்திற்கு அண்மையில் முன்னர் பரம்பரையாக வசித்த முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பொழுது அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாகவும், ஒரு சாரார் வில்பத்து வனப்பிரதேசத்தை மீண்டும் விஸ்தரித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முற்படும் அளவிற்கு ஜனாதிபதியை தவறாக வழிநடாத்தியிருப்பது பற்றியும் அமைச்சர் கவலை தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த வடகிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிளிக்கும் போது, யுத்தம் முடிந்த பின்னரும் கூட அதனால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது மந்தகதியிலேயே நடைபெறுகின்றது.
ஆனால் அரசாங்கமும், மீள்குடியேற்றம் தொடர்பான அமைச்சும் இந்த விடயத்தில் கரிசனையாகவே இருக்கின்றன.
எதிர்பார்த்தபடி வெளிநாடுகளிலிருந்து இதற்காக போதியளவு நிதியுதவிகள் கிடைப்பதில்லை. இந்தியா ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டமொன்றை செய்து வருகின்றது.
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறும் போது தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் பல்வேறு
சிரமங்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது. பொதுவாக வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வியாபாரம், தையல் தொழில், விவசாயம் போன்றவற்றில் பாரம்பரியமாக ஈடுபட்டு வந்தவர்கள் என்ற காரணத்தினால் இதனால் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
அத்துடன், 25ஆண்டுகள் இடம்பெயர்ந்து வாழ்கின்ற சூழ்நிலையில் பரம்பரை தலைமுறை இடைவெளியின் விளைவினால் இளைஞர்களும், யுவதிகளும் பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply