ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
திண்டுக்கல் கணக்கன்பட்டியை சேர்ந்தவர் டி.ராமசாமி. பழனி யூனியன் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு இருதய செயலிழப்பு ஏற்பட்டதாக அறிவித்தது. அப்போதுகூட, ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பின்னர் ஜெயலலிதா டிசம்பர் 5-ந்தேதி இரவு 11.30 மணி அளவில் உயிர் இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். சர்க்கரை காரணமாக அவரது கால்கள் அகற்றப்பட்டதாகவும், ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும், சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
இந்த சந்தேகத்தை மத்திய-மாநில அரசுகள் தீர்க்க வேண்டும். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி டிசம்பர் 14-ந்தேதி மனு அனுப்பினேன். அந்த மனு மீது நடவடிக்கை இல்லை.
எனவே ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.க்கு வழங்க உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்.
ஆவணங்களை பெற்று விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று, நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல், இதுபோன்ற வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கையும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply