பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களின் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் அணிதிரண்டு வந்து அறவழியில் போராடியது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. இப்போராட்டம் நேரம் செல்லச் செல்ல தீவிரம் அடைந்தது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் மாணவர்களும் இளைஞர்களும் ஒருங்கிணைந்து போராடிவருகின்றனர்.

போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமரை சந்திப்பதற்காக நேற்று இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழர்களின் ஒட்டுமொத்தமான உணர்வுகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்து, அவசர சட்டம் தொடர்பாக வலியுறுத்த உள்ளதாக கூறினார்.

மேலும், நியாயம் கிடைக்கும் வரை சட்டப்பூர்வமான போராட்டம் தொடரும் என்று கூறிய அவர், போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், முதலமைச்சர் நல்ல முடிவுடன் வரும்வரையில் போராட்டத்தை கைவிடுவதில்லை என்ற உறுதியுடன் போராட்டம் தொடர்கிறது.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்தார். அப்போது, தமிழர்களின் உணர்வுகள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளதை எடுத்துரைத்த முதல்வர், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.

லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply