அரசியல் உரிமைச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் புதிய நம்பிக்கையோடு அனைவரும் உழைப்போம் : செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா
பிறக்கின்ற சித்திரைப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒளிமயமான எதிர்காலத்தின் வருகைக்கான பாதையைத் திறக்கின்ற வாசல்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரினதும் மனவிருப்பமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கையில் கடந்து போன ஆண்டுகளில் பிறந்து வந்த புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளுக்கு மாறாக துயரங்களையும் அவலங்களையுமே எமது மக்களின் வாழ்வின் மீது அதிக சுமைகளாக்கிச் சென்றுள்ளது.
இதுவரை காலமும் முடிவற்றுத் தொடர்ந்து வந்த அழிவு யுத்தமே இதற்குக் காரணமாக இருந்து வந்திருக்கிறது. எமது மக்களின் வாழ்வியல் உரிமைகள் மீது வலிகளை மட்டும் தந்து கொண்டிருந்த யுத்த சூழல் மெல்ல மெல்ல அகன்று வரும் இத்தருணத்தில் அடுத்து வரும் காலம் வலிமை பெற்ற மகிழ்ச்சி தரும் வாழ்வின் தொடக்கத்தைத் தரும் என்ற நம்பிக்கை ஒளிகள் எம் கண் முன் தோன்றி வருகிறது.இந்த ஆண்டிலும் இன்னொரு புத்தாண்டு பிறக்கவுள்ளது. எமது தேசமெங்கும் புதுவசந்தம் வீச எமது மக்களின் இல்லங்கள் தோறும் புன்னகை பூத்துக் குலுங்க பிறக்கின்ற புத்தாண்டு வழி சமைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். பிறக்கின்ற புத்தாண்டு எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஆண்டின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். எமது மக்கள் அச்சமின்றி உயிர் வாழவும், தேசமெங்கும் சுதந்திரமாக நடமாடவும் உண்மைகளைப் பேசவும் விரும்பியவாறு சுதந்திரமாகத் தொழில் புரிவதற்கேற்ற சூழலை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்தும் உழைப்பதே பிறக்கின்ற புத்தாண்டை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு நாம் ஆற்றும் பாரிய பணியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அன்றாட அவலங்களுக்கான தீர்வும் அபிவிருத்தியும் அரசியல் உரிமைச் சுதந்திரமும் பெற்ற அமைதி மிக்க சமாதான தேசம் ஒன்றை நோக்கிப் பிறக்கின்ற புத்தாண்டில் புது நம்பிக்கையோடு அனைவரும் சேர்ந்து உழைப்போம். பிறக்கவிருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமையும் என்ற நம்பிக்கையோடு சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவரினதும் உணர்வுகளோடு நாமும் இணைந்து கொள்கிறோம் இவ்வாறு ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply