இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது: மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம் சூட்டி இருக்கிறார். அதில் இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக் கோரி தமிழக மாணவர்கள், இளைஞர்கள் மாநிலம் முழுவதும் நடத்தி வரும் அறவழிப் போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூவை வெகுவாக கவர்ந்து உள்ளது.
இதுபற்றி பேஸ்புக்கில் (முகநூல்) பதிவில் அவர் மனம் நெகிழ்ந்து எழுதி இருப்பதாவது:-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். இந்த போராட்டத்துக்கு கடல் கடந்தும் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் ஆதரவு கிடைத்து இருப்பதும் பெருமைக்குரியது.
தமிழக மக்களின் இந்த மகத்தான போராட்டம் அடைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து, இந்தியர்களோ, ஏன் தமிழர்களுமே கூட முழுமையாக உணர்ந்திருப்பார்களா? என்று தெரியவில்லை.
இந்த போராட்டம் ஜல்லிக்கட்டோடு மட்டும் முடிந்துவிடுமோ என்றோ, தமிழகத்தோடு நின்றுவிடும் என்றோ நினைக்கக் கூடாது. இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக திகழும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், போதிய சுகாதார வசதி இல்லாமை, சத்துணவு குறைபாடு ஆகியவற்றுக்கு எதிராகவும் இந்த போராட்டம் தொடரப்பட்டு அவற்றிலும் வெற்றி காணவேண்டும்.
தமிழர்கள் ஏற்றிய இந்த தீப்பொறி நாடு முழுவதும் பரவி நமது நாட்டில் காணப்படும் மிகப்பெரிய எல்லா பிரச்சினைகளையும் முறியடிக்க ஒளியேற்ற உதவுவதாக உள்ளது. அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகவும் இந்த போராட்டம் அமைந்து இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு அதை மற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு பின்பற்றவேண்டும்.
நாம் எல்லோரும் சாதி, மத, பேதமின்றி ஒருங்கிணைய வேண்டும். அனைவரும் பிரிந்து கிடக்காமல் ஒன்றாக இணைந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் இந்த போராட்டம் நிரூபித்து இருக்கிறது. இதே வழியில் போராடினால் இந்தியாவில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக திரண்டு புயல், சூறாவளி போல தங்களுடைய சக்தியை வெளிப்படுத்தினால் இந்த பூமியில் எதையுமே தடுக்க முடியாது என்பதையும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி உணர்த்துவதாக அமைந்து உள்ளது.
இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிட அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவுக்கே தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை தமிழக இளைஞர்கள் நிரூபித்து காட்டி இருக்கின்றனர். இதே பாதையில் நமக்கு முன்னே உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ளலாம்.
எனக்கு மறு பிறவி மீது நம்பிக்கை கிடையாது. அப்படி மறுபிறவி இருப்பதாக வைத்துக் கொண்டால் முந்தைய பிறவிகள் ஒன்றில் நான் நிச்சயம் தமிழனாகவும் பிறந்திருப்பேன். நான் எப்போது தமிழ்நாட்டுக்கு சென்றாலும் (மார்கண்டேய கட்ஜூ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்) எனது சொந்த ஊருக்கு செல்வது போன்ற உணர்வுதான் ஏற்படும்.
எனக்கு தமிழ்நாட்டில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். என் மீது தமிழர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளனர். இது மாதிரியான அன்புள்ளமும், பெருந்தன்மையும் தமிழர்களிடம் இருப்பதால்தான் நான் தமிழர்களை சந்திக்கும்போதெல்லாம் ‘நானும் ஒரு தமிழன்’ என்று அடிக்கடி பெருமையுடன் சொல்லிக் கொள்வது உண்டு.
தமிழர்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்கள் வாழ்க.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
வழக்கமாக முகநூல் பதிவில் மிகச்சுருக்கமாகவே தங்களுடைய கருத்தை அதை பயன்படுத்துவோர் பதிவு செய்வது வழக்கம். ஆனால் மார்கண்டேய கட்ஜூ மிக விரிவாக கட்டுரை வடிவில் தனது கருத்தை பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply