ஜெயலலிதா பிறந்த நாளில் மரம் நடும் பெருந்திட்டம் தொடக்கம்: கவர்னர் அறிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உள்ளம் கவர்ந்த பணி என்பதால், அவரது பிறந்த நாளில் மரம் நடும் பெருந்திட்டம் தொடங்கப்படும் என்று சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசினார். சட்டசபையில் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:-
தொடர்ந்து கடும் இயற்கைப் பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்த வண்ணம் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து சிறப்பாகவும், துரிதமாகவும் மீண்டு வந்த வேளையில், 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வார்தா புயலின் கோர தாண்டவத்தையும், சென்னை பெருநகரம், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் எதிர்கொண்டு, வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளன.
இந்த நிலையில், நிவாரணப் பணிகளை உடனடியாகச் செயல்படுத்த 585 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கி இந்த அரசு துரிதமாகச் செயல்பட்டது. தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளுக்காக 1,972 கோடியே 89 லட்சம் ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கக்கோரியும், நிரந்தர கட்டுமானப் பணிகளுக்காக 20,600 கோடியே 37 லட்சம் ரூபாயை தமிழ்நாட்டிற்கு வழங்கக் கோரியும் முதல்-அமைச்சர் மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை உடனடியாகப் பரிசீலித்து நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மரங்கள் நடுவது மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பது போன்றவை தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உள்ளம் கவர்ந்த பணி என்பதால் இந்த மரம் நடும் பெருந்திட்டம் அவரது 69-வது பிறந்த நாளான வரும் 24-2-2017 அன்று தொடங்கப்படும்.
வார்தா புயலால் நமது மாநிலம் கடும் காற்றைத் தான் எதிர் கொண்டதே தவிர எதிர்பார்த்த அளவு மழையைப் பெறவில்லை. கடந்த 140 ஆண்டுகளில், மாநிலம் கண்டிராத மிக மோசமான வறட்சி இது என்ற அடிப்படையில், இதனை ‘கடும் வறட்சி’ என்று அறிவித்து, பயிரிழப்பு மற்றும் இதர நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசை இந்த அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக பரிசீலனை செய்து நிதியுதவி வழங்கும் என நான் நம்புகிறேன். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அடிச் சுவட்டைப் பின்பற்றி, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டிட, இந்த அரசு தொடர்ந்து பாடு படும்.
இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களின் நிலங்களை மீண்டும் வழங்கி, அவர்களின் பொருளாதார உரிமைகளை நிலைநாட்டி, சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் அவர்கள் வாழ சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று நம்புகிறேன்.
இலங்கையில் சிறைப்பட்டிருக்கும் எஞ்சிய மீனவர்களையும், பிடித்து வைத்துள்ள மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டி, இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக 1974-ம் ஆண்டு இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற்று, கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அளித்த கோரிக்கை மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply