கடற்படைத் தளபதி விசாரணைக்கு அழைப்பு
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் ஊடவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே அவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளரிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.
சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஊடகங்களில் வெளியான காணொளிகள், புகைப்படங்கள் என்பவற்றை பயன்படுத்தவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கடற்படைத் தளபதியிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்த பின்னர் மேலதிக விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் சீனாவுக்கு முதலீட்டு வலயமொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், துறைமுகப் பகுதியையும் சீனாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்து ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது துறைமுகத்திற்கு குறித்த ஊழியர்களால் சேதம் ஏற்படுத்தப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு கடற்படைத் தளபதி இராணுவத்தினருடன் சென்றிருந்தார்.
ஊழியர்களையும், அங்கிருந்த ஊடவியலாளர்களையும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கடற்படைத் தளபதி திட்டியதோடு அதன் பின்னர் ஊடவியலாளர் ஒருவர் மீதும் அவர் தாக்குதல் நடத்தப்பட்டபோது பதிவுசெய்த காணொளி வெளியானதை தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply