இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும்
இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் மனித உரிமைகள் அமைப்பு ஆணையருக்கும் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் தமிழர் படுகொலை குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியிருப்புகள், இராணுவ கட்டுமானங்கள் அகற்றப்படவேண்டும். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்துடன், தமிழக சட்டப்பேரவையில் 2012 மார்ச் 27 ஆம் திகதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல், இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கான அத்தாட்சி ஆகியவற்றை இணைத்து அனுப்பியிருப்பதாக ம.தி.மு.க செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னரும் அங்குள்ள தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடருகின்றன.
மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூட உள்ள நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பேரவையில் 60 நாடுகள் கொண்ட கூட்டத்தைக் கூட்டி பல பொய்யானத் தகவல்களை இலங்கை அரசு அளித்திருக்கிறது.
சர்வதேச நீதி விசாரணையை ஒருபோதும் நடத்த விடக் கூடாது என்ற எண்ணத்திலேயே கால அவகாசம் கேட்டு காலம் தாழ்த்த இலங்கை அரசு முயற்சிக்கிறது. எனவே, மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூடுவதற்கு முன்னதாக, இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இலங்கையில் சர்வதேச நீதி விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பெப்ரவரி இரண்டாவது வாரத்துக்குள்ளாக இந்த முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஒவ்வொரு கட்சி சார்பில் தொடர் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply