மஹிந்தவுக்கு சம்பந்தன் பகிரங்க அழைப்பு

பிரிவினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைக் கைவிட்டு தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்மோடு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்தார். அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பிரிக்க முடியாத ஐக்கிய நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், பிரிவினைக்காகச் செயற்படாமல் எம்மோடு சேர்ந்து செயற்படுவது முக்கியமாகிறது என்றும் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிழக்கில் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அழைப்பை விடுத்தார்.

 

அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய இரா. சம்பந்தன்.

 

களுவாஞ்சிக்குடியில் அழகிய மருத்துவ மனையை நிர்மாணித்துள்ளமைக்கு அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் நிதியுதவி வழங்கிய ஜப்பானிய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

 

நிலையான அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் வறுமையொழிப்பு செயற்றிட்டங்களை மிக நேர்த்தியாக அவர் முன்னெடுத்து வருகின்றார். இச் செயற்பாடுகள் வெற்றிபெற நாம் வாழ்த்துவதுடன் அதற்காகப் பிரார்த்திக்கின்றோம்.

 

களுவாஞ்சிக்குடி நினைவுகள் சிறப்பானவை.

 

அன்று பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இராசமாணிக்கம் செயற்பட்டார். 61ம் ஆண்டு நாட்டின் ஆட்சியை முடக்குவதற்காக நாம் வடக்கு கிழக்கில் பாரிய சத்தியாக்கிரகமொன்றை மேற்கொண்டோம்.

 

மட்டக்களப்பில் அரச அதிபரும் அதிகாரிகளும் கச்சேரிக்குச் செல்ல முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தினோம்.

 

அச்சமயம் நாங்கள் கைது செய்யப்பட்டு பனாகொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டோம். எனது அறையில் ராஜவரோதயன் இராசமாணிக்கம், மாணிக்கவாசகர் ஆகியோரும் இருந்தனர். அப்போது எனது வயது 28. இளம் சட்டத்தரணியாக பணி புரிந்தேன்.

 

இப்போது நாம் பேச்சுவார்த்தை மூலமும் புதிய அரசியலமைப்பு மூலமும் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். சமத்துவத்தின் அடிப்படையிலான சமாதானமே எமது நோக்கம்.

 

எமது இத்தகைய முயற்சிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்து புதிய அரசாங்கம் அமைக்கப் போவதாக பிரச்சினைகளைக் கிளப்பி வருகின்றார்.

 

பிரிக்கப்படாத நாட்டுக்குள் ஒரு நிரந்தரத்தீர்வு என்பதே எமது நிலைப்பாடு. அதற்கு அவரது முழுமையான ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றும் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply