யாழ் முகாமிலிருந்த இடம்பெயர்ந்த மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு

மோதல்களால் இடம்பெயர்ந்து யாழ் குடாநாட்டிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வெள்ளப்பெருக்கால் முகாம்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்து கைதடி பல்கலைக்கழக மாணவர் விடுதி மற்றும் சிறுவர் பூங்காவில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களே வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்த இடம்பெயர்ந்த மக்கள் கைதடியிலுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். சித்திரைப் புத்தாண்டு தினத்துக்கு முதல் நாளான 13ஆம் திகதியே இவர்கள் முகாம்களிலிருந்து பிறிதொரு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மழை வீழ்ச்சி மேலும் அதிகரித்திருந்தால் மிருசுவில் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்குமென யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.அதேநேரம், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ் குடாநாட்டிலுள்ள முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்க அதிகாரிகளைத் தவிர வெளியார் எவரும் முகாம்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனினும், வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களை வெளியார் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் குறிப்பிட்ட முகாமிலிருந்தால் அவர்களின் பெயர் விபரங்களை உரிய அதிகாரிகளிடம் கூறி முகாமுக்குள் சென்று இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் உறவினர்கள் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும், யாழ் குடாநாட்டிலுள்ள முகாம்களில் அவ்வாறானதொரு நிலை இல்லையென யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், அரசாங்கத்தால் 13,14ஆம் திகதிகளில் அறிவிக்கப்பட்ட தற்காலிக மோதல் நிறுத்த காலப்பகுதியில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து 26 பேர் மாத்திரமே யாழ் குடாநாட்டுக்குச் சென்றுள்ளனர். எனினும், வவுனியாவுக்கு 500ற்கும் அதிகமானவர்கள் வருகைதந்ததாக தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply