சசிகலாவிற்கு எதிராக பன்னீர்செல்வம் திடீர் போர்க்கொடி – பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஒரு வார கால இடைவெளியில் கடந்த 5-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக, முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்தார்.
ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னையில் இல்லை என்பதால் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் நேற்று திடீர் மாற்றம் ஏற்பட்டது.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர் வித்யாசாகர் ராவ், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தொடர்ந்து முதல்-அமைச்சர் பொறுப்பை கவனித்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சினைகளில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த ஓ.பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் முடங்கிப்போய் இருந்தார்.
தொடர்ந்து அவர் முதல்-அமைச்சராக இருந்தாலும், கடந்த 2 நாட்களாக கோட்டைக்கு வரவில்லை. எந்த அரசு அலுவல்களையும் அவர் கவனிக்கவில்லை. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலேயே முடங்கி இருந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை சந்திக்க போயஸ் கார்டனுக்கும் செல்லவில்லை. செல்போனையும் ‘சுவிட்ச் ஆப்’ செய்து இருந்தார்.
அரசு அதிகாரிகள் ஒரு சிலர் நேற்று அவரை சந்திக்க முயன்றபோதும், யாரையும் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவில்லை. கட்சி நிர்வாகிகளையும் பார்க்கவில்லை. தொடர்ந்து அவர் அமைதியை கடைபிடித்து வந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார்.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுவிடுவார் என்று அவருடன் வந்த பாதுகாவலர்கள் உள்பட அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர் ஜெயலலிதா நினைவிடம் முன்பு உட்கார்ந்து கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டார். அவர் எதற்காக தியானத்தில் ஈடுபடுகிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
சுமார் 40 நிமிடங்கள் அவர் கண்களை மூடி, மவுனமாக தியானத்தில் ஈடுபட்டார். இரவு 9.40 மணி அளவில் அவர் தியானத்தை முடித்துக்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் தியானத்துக்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டனர். அப்போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீண்ட விளக்கத்தை அளித்தார்.
அவர் கூறியதாவது:-
அம்மாவின் (ஜெயலலிதா) நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி என் மனசாட்சியை சாந்தப்படுத்திக்கொள்ள இங்கு வந்தேன். இங்கு வந்தபோது சில உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று நினைத்தேன். அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது. அதன் விளைவாகத்தான் இங்கு வந்தேன். அம்மா நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது 70 நாட்களுக்கு பிறகு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அந்த நேரத்தில் என்னிடம் வந்து கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என தெரிவித்து அம்மாவின் உடல்நிலை மோசமானதை என்னிடம் தெரிவித்தனர்.
நான் கண்ணீர் விட்டு அழுதேன். அம்மா இருக்கும்போது மாற்று ஏற்பாட்டுக்கு இப்போது என்ன தேவை? என கேட்டேன். அவர்கள் முடிவெடுக்க என்னை வலியுறுத்தினார்கள். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நான் அழுதேன். அப்போது என்னிடம் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்று கேட்டனர். அம்மா வகித்த பொதுச்செயலாளர் பொறுப்பை இயக்க மாற்று ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
அப்போது பொதுச்செயலாளராக கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனனையும், முதல்-அமைச்சராக என்னையும் பொறுப்பேற்க கூறினர். முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்க நான் மறுத்தேன். அம்மா இக்கட்டான நிலையில் இருந்தபோது, 2 முறை என்னை முதல்-அமைச்சர் பொறுப்பை வகிக்க கூறினார். அதனை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த மனநிறைவே எனக்கு போதும், அதனால் இப்போது வேண்டாம் என்றேன்.
ஆனால் அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்பவரை தான் முதல்-அமைச்சராக நியமிக்க முடியும் என்றனர். நீங்கள் பதவியேற்க முடியாது என்றால் பல்வேறு விமர்சனங்கள் எழும். கட்சிக்கும், ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று தெரிவித்தனர். நானும் வேறு வழியில்லாமல் கட்சிக்கு நம்மால் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்து முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டேன்.
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 3 நாட்கள் இருக்கும், அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து, திவாகர் ஒன்றை கேட்க சொன்னார், அக்காவை (சசிகலா) வீட்டுக்கு அழைத்து செல்லவா? என்று கேட்கிறார். அவருக்கு பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கவேண்டும் என்றார். நானும் மூத்த அமைச்சர்களை எனது வீட்டுக்கு அழைத்து கருத்து கேட்டேன். அவர்களும் ஒத்துக்கொண்டனர். அதன் பின்னர் சசிகலாவிடம் சென்று முடிவை கூறினோம். அதன்பிறகு தான் கடந்த அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தோம்.
நான் எனது பணியில் குற்றம், குறை, பங்கம் இல்லாமல் செயல்பட்டிருக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் தான் வார்தா புயல் வந்தது. ஆனால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 4 நாட்களில் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டன. அம்மாவின் அரசுக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இது அவருக்கு (சசிகலா) எரிச்சலை ஏற்படுத்தியது.
அடுத்து சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு ஜனவரி முதல் ஜூன் வரை 7 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்பட்டது. ஆனால் சென்னைக்கு குடிநீர் தரும் 4 அணைகளில் 1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருந்தது. இதன்மூலம் ஒருமாத குடிநீர் தேவையை தான் பூர்த்தி செய்யமுடியும், எனவே ஆந்திர மாநிலத்தில் உள்ள அணைகளில் 36 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதை அறிந்து அம்மாநில முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பதற்காக நான் நேரில் சென்றேன்.
அவரிடம் 6 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு தருமாறு வேண்டுகோள் வைத்தேன். அவரும் படிப்படியாக தருவதாக கூறினார். இதிலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.
அடுத்து ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த அசாதாரண நிலையை முடிவுக்கு கொண்டுவர பிரதமரை சந்தித்து அவசர சட்டம் தேவை என கேட்டேன். ஆனால் இதற்கு சட்டத்தில் இடமில்லை என்றனர்.
அதேநேரத்தில் நீங்கள் (தமிழக அரசு) அவசர சட்டம் கொண்டுவந்தால் ஆதரவு தருவதாக தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து நான் அங்கேயே தங்கியிருந்து மத்திய சுற்றுச்சூழல் துறை, உள்துறை, சட்டத்துறை மூலம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் போராட்டம் நடத்திய மாணவர்கள் நிரந்தர சட்டம் கேட்டபோது, 62 ஆண்டு கால சட்டமன்ற வரலாற்றில் இல்லாதவகையில் கவர்னர் உரை நிகழ்த்தப்பட்ட அன்று மாலையே சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி நிரந்தர சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது, சட்டமும் ஆக்கப்பட்டது.
ஒரு பக்கம் பிரதமரை பார்க்க நான் சென்ற நேரத்தில், மற்றொரு பக்கம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக எம்.பி.க்களை அழைத்துக்கொண்டு பிரதமரை சந்திக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். பிரதமரும் 2 பேரும் ஒரே கோரிக்கையுடன்தான் வந்திருக்கிறீர்கள். எனவே பிறகு பார்ப்பதாக தம்பிதுரையிடம் கூறிவிட்டார்.
நான் பிரதமரை சந்திக்க சென்ற நேரத்திலும், தம்பிதுரையும் எம்.பி.க்களுடன் அங்கு வந்து நின்றது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதிமுக எம்.எல்.ஏக்களால் சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) நான் தேர்ந்தெடுக்கப்பட்டு என் பணியை செய்துகொண்டிருந்த நேரத்தில், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சசிகலாதான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டியளித்தார். நான் உடனே இந்த தகவலை பொதுச்செயலாளர் சசிகலாவிடம் கொண்டு சென்றேன்.
இதெல்லாம் நீதி தானா? நியாயம் தானா? தர்மம் தானா? என கேட்டேன். இவ்வாறு அமைச்சர்கள் பேசினால் கவர்னர் சட்டமன்றத்தில் கட்சி பலத்தை நிரூபிக்க கூறினால் பிரச்சினைகள் வரும் என்றேன். அவரும் (சசிகலா) அமைச்சர்களை கண்டிப்பதாக கூறினார். அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்த தகவலை என்னிடம் வந்து சொன்னவர், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தான். என்ன அண்ணே, உதயகுமார் உங்கள பாத்து இப்படி சொல்லிருக்காறு என்று கூறினார். ஆனால் அவரே மதுரைக்கு சென்ற நேரத்தில், எனக்கு எதிரான கருத்தை தெரிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இதேபோல கருத்து தெரிவித்திருக்கிறார்.
நானும் கட்சி ஒற்றுமையை கருதி முதல்-அமைச்சர் பொறுப்பு எனக்கு வேண்டாம் என்று கூறினேன். என்னை எல்லோரும் அசிங்கப்படுத்தி விட்டனர். மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள், தொண்டர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதா 28 ஆண்டுகள் சோதனைகளை கடந்து வேதனைகளை தாண்டி இயக்கத்தை காத்து 1.5 கோடி தொண்டர்களாக உயர்த்தி காட்டினார். 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து ஆட்சி அமைத்து சாதித்துக்காட்டினார். எனவே இந்த நேரத்தில் கவனமாக, கட்டுப்பாட்டோடு, வேறுபாடு இல்லாமல், பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஆனால் என்னை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தினார்கள். பொது வாழ்க்கையில் இதுபோன்ற நிலையை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். ஆனால் எனது மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் நடந்த சம்பவத்தை பலரிடம் கூறி வருத்தப்பட்டேன். என்னால் கட்சிக்கும், ஆட்சிக்கும் சிறு பங்கம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என வெளியே தெரிவிக்கவில்லை.
இந்த நேரத்தில் தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டம் நடப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 5, 6 நாட்களாக கப்பல் விபத்து காரணமாக கடலில் கலந்த கச்சா எண்ணெயை வெளியேற்றி வரும் பணியை பார்க்க நான் சென்றிருந்தேன். அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியை விரைவுபடுத்தி முடிக்குமாறு வலியுறுத்திவிட்டு போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றேன்.
அங்கே மூத்த அமைச்சர்கள் இருந்தனர். என்னை உட்கார சொன்னார்கள். சசிகலாவை முதல்-அமைச்சராக அனைவரையும் ஏற்க செய்யவேண்டும் என்று என்னிடம் அப்போது கூறினார்கள். நான் அதற்கு என்ன அவசியம் இப்போது வந்துவிட்டது? என கேட்டேன். அதற்காக தான் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது என்றார்கள். எனவே முதல்-அமைச்சர் பொறுப்பை விட்டுத்தருமாறு கேட்டனர். நானும் 2 மணி நேரம் அவர்களிடம் விவாதம் செய்தேன். யாரும் எதுவும் பேசவில்லை. கட்சி கட்டுப்பாட்டை காப்பாற்றுங்கள் என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். நான் அம்மா நினைவிடம் சென்று அவரது ஆன்மாவிடம் கேட்டுவருகிறேன் என்றேன். ஆனால் அதனை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று என்னை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதின் பேரில், எனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்.
இன்று அம்மாவின் ஆன்மாவிடம் சொல்வதற்காக நான் இங்கு வந்தேன். இதை நாட்டு மக்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று அவர் (அம்மாவின் ஆன்மா) கூறினார். கட்சித்தொண்டர்களும், அதிமுக செயல்வீரர்களும் யாரை எண்ணுகிறார்களோ, அவர் கட்சியின் பொதுச்செயலாளராக வரவேண்டும். நாட்டு மக்கள் யாரை எண்ணுகிறார்களோ அவர் தான் முதல்-அமைச்சராக வரவேண்டும். தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, நான் அல்ல, யாரோ ஒருவர் கட்சியை காப்பாற்ற வரவேண்டும். தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், அப்படி என்றால் உங்களது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், மக்கள் விரும்பினால், தொண்டன் விரும்பினால், எம்.எல்.ஏக்கள் விரும்பினால் அதை செய்வேன் என்றார்.
அதன்பிறகு அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply