22 எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை ஓ.பன்னீர்செல்வம்-நத்தம் விஸ்வநாதன் மகன்கள் களம் இறங்கினர்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா முதல்-அமைச்சராக ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 127 பேர் பஸ்கள் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டு மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் உள்ள விடுதியில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.அவர்களை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்பு கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சசிகலா முதல்- அமைச்சராக வருவதை ஏற்றுக் கொள்ளாத மனநிலையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் யார்-யார் என ஓபன்னீர்செல்வம் தரப்பினர் கணக்கெடுத்தனர். அப்போது 22 எம்.எல்.ஏ.க்கள் வரை சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த 22 எம்.எல்.ஏ.க்களிடமும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள், நத்தம் விஸ்வநாதனின் மகன் ஆகியோர் செல்போனில் பேசியுள்ளனர். அவர்களை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் இழுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடையே குழப்பமான மனநிலையே நிலவுகிறது. புதிய அரசு அமையும்போது அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுள்ள சசிகலா பக்கம் இருந்தால் இன்னும் நாலரை ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவிக்கலாம் என்ற மனநிலை ஒருபக்கம் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தொகுதி மக்கள் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி வருமே என்ற அச்சம் அவர்களிடம் நிலவுகிறது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் இந்த மன நிலையை மாற்றி அவர்களை ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் போயஸ் கார்டன் தரப்பு ஈடுபட்டுள்ளது. இதற்காக பேச்சு வார்த்தை விவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply