எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க நாளை சட்டசபை கூடுகிறது: ஓட்டெடுப்பு நடைபெறுவது எப்படி?
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து 18-ந் தேதியன்றே சட்டசபை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டிருப்பதாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ், சட்டசபையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 18-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் சபாநாயகர் கூட்டி இருக்கிறார்.
அப்போது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில், சட்டசபை கூடியதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டுவருவார். அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.
அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் உரையாற்றி தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.
அதன் பின்னர் அந்த தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் ஓட்டெடுப்புக்கு சபாநாயகர் ப.தனபால் விடுவார். தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என மூன்று பிரிவுகளாக வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்துவார். முன்னதாக இந்த தீர்மானத்தில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற அரசுக் கொறடாவின் உத்தரவு வாசிக்கப்படும்.
பின்னர் சட்டசபையின் 6 ‘பிளாக்கு’களில், (பகுதி) ஒவ்வொரு பிளாக்கிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எண்ணிக் கணிக்கும் முறையில் ஓட்டளிக்க சபாநாயகர் கேட்டுக்கொள்வார். தீர்மானத்தை ஆதரிப்போர் முதலில் எழுந்து நிற்பார்கள். அவர்களின் பெயர்களை சட்டசபை செயலாளர் குறித்து வைத்துக்கொண்டு அதைப் படிப்பார்.
பின்னர் எதிர்ப்போர், நடுநிலை வகிப்போரின் பெயர்கள் எழுதப்படும். 6 பிளாக்களிலும் ஓட்டெடுப்பு முடிந்தபிறகு, ஆதரிப்போரின் எண்ணிக்கை கணக்கிடப்படும். 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை முதல்-அமைச்சரின் தீர்மானம் பெற்றிருந்தால், அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக அறிவிக்கப்படும்.
இந்தத் தீர்மானத்தின்போது சபாநாயகர் நடுநிலை வகிக்கவேண்டும். தீர்மானத்துக்கு ஒரு ஓட்டு தேவைப்படும்போது மட்டுமே அவர் ஒரு சார்பாக ஓட்டளிக்க முடியும். அந்த வகையில் ஓட்டெடுப்பு நடக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்-அமைச்சர் என்பதால், அவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படும். அவருக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தனியாக வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்பது ஆய்வில் உள்ளது.
ஆனால் சட்டசபையில் பலப்பரீட்சை நடக்கும்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது கடுமையான எதிர்ப்பை எதிர்தரப்பினர் எந்த வகையிலும் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே யாரை ஆதரிக்கவேண்டும் என்ற அரசு கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது கவனிக்கத் தக்க ஒன்றாக உள்ளது.
ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை சபாநாயகருக்கு முன்கூட்டியே அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் மற்ற எம்.எல்.ஏ.க்கள், ஒருவேளை கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு கொறடா கோரிக்கை விடுக்க முடியும்.
ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரை கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக இருந்துகொண்டு சசிகலா நீக்கியது செல்லத்தக்கதா? என்ற சட்டரீதியான கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, சட்டசபையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை கோர்ட்டு வரை செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply