இரண்டு நாள் மோதல் நிறுத்தம் போதுமானதல்ல: ஜோன் ஹோல்ம்ஸ்

இலங்கை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களை இரண்டு நாட்கள் மாத்திரம் நிறுத்தியமை போதுமானதல்லவென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற இந்த இரண்டு நாள் மோதல் நிறுத்தம் போதுமானதாக இருக்கவில்லையென ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் கூறினார்.

“குறிப்பிட்டளவு நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்கவோ அல்லது மனிதநேயப் பணியாளர்களை அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ 48 மணித்தியாலங்கள் போதுமானதல்ல என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்” என ஹோல்ம்ஸ் குறிப்பிட்டார்.

இந்தக் காலப்பகுதியில் பெருமளவான மக்களை வெளியேற்ற முடியாதென்பது தெளிவாகத் தெரிகின்றபோதும், துரதிஸ்டவசமாக மோதல் தவிர்ப்பு காலப் பகுதியில் வெளியேறிய மக்களின் எண்ணிக்கை அதற்கு முன்னர் வெளியேறியவர்களின் எண்ணிக்கையையும்விட மிகக் குறைவாகவே காணப்பட்டது என்றார் அவர்.பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை இந்த மோதல் தவிர்ப்பு காலப் பகுதியில் வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லையெனவும் ஹோல்ம்ஸ் கூறியுள்ளார்.

“பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படக் கூடாது. பொதுமக்களை வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும்” என ஐ.நா. மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்தார்.இரண்டு நாட்களுக்கு மேலான மனிதநேய மோதல் நிறுத்தமொன்றுக்கு இரண்டு தரப்பினரும் செல்லவேண்டியது அவசியம் எனவும் ஹோல்ம்ஸ் குறிப்பிட்டார்.

பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகளை அறிந்துசென்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.

புலிகளுடன் நேரடியாகப் பேச்சு

பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களை விடுவிப்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலிகளுடன் தான் நேரடியாகக் கலந்துரையாடியதாகவும் ஐ.நா. மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் கூறியுள்ளார்.“நான் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தேன். அவை களநிலைமைகள் தொடர்பானவை அல்ல. அதற்கும் அப்பால் பொதுமக்கள் அவர்களின் விருப்பங்களுக்கு எதிராகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா என்பது பற்றியே கலந்துரையாடியிருந்தேன்” என அவர் தெரிவித்தார். ஆனாலும், பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக மக்களைத் தாம் தடுத்துவைத்திருக்கவில்லையென விடுதலைப் புலிகள் பதிலளித்ததாகவும் ஹோல்ம்ஸ் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply