வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியது
வடகொரியாவில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. நாட்டின் தலைவராக 33 வயது கிம் ஜாங் அன் பதவி வகித்து வருகிறார். இவருடைய அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46). இருவரும் அண்ணன், தம்பி என்றாலும், ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்தவர்கள் ஆவர். கடந்த 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மக்காவ் செல்வதற்காக கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கிம் ஜாங் நாம் காத்திருந்தார். அப்போது அவர் மீது பயங்கர விஷத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரை பதவிபோட்டி காரணமாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சதித்திட்டம் தீட்டி கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கிம் ஜாங் நாம் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றி நேரில் பார்த்தவர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து இருந்தனர். 2 பெண்கள் அவருடைய முகத்தின் மீது விஷ ஊசிகளை குத்திவிட்டு ஓடியதாகவும் கூறப்பட்டது.
வீடியோ ஆதாரம்
இந்த நிலையில் விமான நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த, வீடியோ பதிவுகள் மலேசியாவின் பல்வேறு இணையதளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த அன்று விமான நிலையத்தில் விமானிகள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் செல்லும் பகுதியில் கிம் ஜாங் நாம் நின்றிருந்தார். அப்போது, வெள்ளை நிற கோட்டு அணிந்த பெண் வேகவேகமாக அங்கு வருகிறார். அந்த பெண் கிம் ஜாங் நாமின் பின்னால் நின்றவாறே, திடீரென தனது இரண்டு கைகளாலும் கிம் ஜாங் நாம் முகத்தின் மீது அழுத்தமாக எதையோ(விஷம்) தேய்க்கிறார். பின்னர் விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.
அதே நேரம் தாக்குதல் நடந்த அடுத்த சில வினாடிகளில் அந்த இடத்தில் இருந்து மற்றொரு பெண் வேறு பக்கமாக வேக வேகமாக நடந்து செல்கிறார்.
மேற்கண்ட காட்சிகள்தான் விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
தப்பி சென்றனர்
இந்த படுகொலை தொடர்பாக வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்த 2 பெண்களும், மலேசியா மற்றும் வடகொரியா நாடுகளைச் சேர்ந்த 2 ஆண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தவிர கிம் ஜாங் நாம் படுகொலை செய்யப்பட்ட சிறிது நேரத்தில் மலேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற வடகொரியாவைச் சேர்ந்த 4 பேரை மலேசிய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எனினும், இவர்கள் ஜகார்த்தா, துபாய் வழியாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்க் நகருக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மலேசியா கண்டனம்
இதற்கிடையே, கிம் ஜாங் நாமின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வடகொரியா மலேசியாவை கேட்டுக் கொண்டது. ஆனால் இதற்கு மலேசியா அரசாங்கம் மறுத்துவிட்டது.
இதுபற்றி மலேசிய சுகாதாரத்துறை மந்திரி சுப்பிரமணியம் சதாசிவம் கூறுகையில், ‘‘வடகொரிய தலைவரின் அண்ணனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதன்கிழமைக்குள் முடிவுகள் பெறப்படும்’’ என்று தெரிவித்தார்.
ஆனால் மலேசியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று வடகொரியா திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இந்த நிலையில், மலேசியாவுக்கான வடகொரிய தூதர் காங்க் கோலை மலேசிய வெளியுறவு அமைச்சகம் நேற்று தனது அலுவலகத்துக்கு வரவழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply