இலங்கையில் கடும் வறட்சி: இந்தியா 100 டன் அரிசி வழங்கியது
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு நீர் மட்டம் வழக்கத்தை விட 30 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் அளவு குறைவாக உள்ளது.வழக்கமாக அங்கு 8 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் ஆனால் இந்த ஆண்டு மழை பெய்யாததால் 3 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. அதனால் அங்கு அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, இலங்கைக்கு இந்தியா 100 டன் அரிசி மற்றும் 8 டேங்கர் குடிநீரும் வழங்கியது. சமீபத்தில் கொழும்பு சென்ற இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் இவற்றை வழங்கினார்.
அப்போது இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, வெளியுறவு மந்திரி மங்களசமரவீர, சர்வதேச வர்த்தகம் மற்றும் வளர்ச்சி துறை மந்திரி மாலிக் சமரவிக்ரம உள்ளிட்டோரை சந்தித்தார்.
வருகிற மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்ல இருக்கிறார். அது குறித்து அவர்களுடன் வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் தமிழ் அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் மந்திரியுமான ரயூப் ஹக்கிம் உள்ளிட்டோரையும் சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையேயான உறவு குறித்தும், இந்தியா அளித்து வரும் பொருளாதார உதவிகள் குறித்தும் விளக்கினார்.
இம்மாத தொடக்கத்தில் வறட்சி பாதித்த இலங்கைக்கு பாகிஸ்தான் 25 டன் அரிசியை நிவாரண உதவியாக அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply