இலங்கைக்கு இந்தியா அழுத்தம்கொடுக்க வேண்டுமாம்: கூட்டமைப்பு

பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு உடனடியாக மோதல்களை நிறுத்தவேண்டுமென இலங்கை அரசாங்கத்துக்கு, புதுடில்லி அழுத்தம் கொடுக்கவேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுடன் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்தாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டுமென இந்திய அரசாங்கத்துக்கு தாங்கள் கூறியதாகக் குறிப்பிட்ட அவர், மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களின் நிலைமைகள் குறித்துத் தாம் கவலையடைவதாகவும் கூறினார்.

இலங்கைக்கு மோதல்களை நிறுத்தவேண்டுமென்பது தொடர்பில் அழுத்தங்கள் எதுவும் கொழும்புக்கு வழங்கப்படாததாலேயே அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது என சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்தார்.

“பொதுமக்களை இலங்கை அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாவிட்டால், அதனைப் பாதுகாக்கும் உரிமை எமக்கு (இந்தியாவுக்கு) உள்ளது எனக் கூறவேண்டும்” என்பதை புதுடில்லியிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

“இந்தியா தங்கள் பக்கம் இருப்பதாக இலங்கை நினைக்கிறது.அமைச்சர் ஒருவர் பலதடவைகள் பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால், இதனைக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமோ அல்லது இந்திய அரசாங்கமோ மறுக்கவில்லை” என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply