வர்த்தமானி அறிவிப்பு போலியானதென்றால் மஹிந்த நீதிமன்றம் செல்ல முடியும்
மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட திறைசேரி முறிகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும், இது தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையெனவும் நிதி அமைச்சும், மத்திய வங்கியும் தெரிவித்துள்ளன. திறைசேரி முறி விநியோகம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்குரிய வர்த்தமானி அறிவித்தல் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலையில் திறைசேரி முறிக்கான கொடுப்பனவுகள் குறித்து எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த குழப்பம் நிறைந்த செயற்பாடுகளே நிலைமை மோசமடையக் காரணமானதாகச் சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் தனது கையொப்பம் போலியாக இடப்பட்டிருப்பதாக கருதினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும். நீதிமன்றம் சென்றாலே உண்மைகள் பல வெளியாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியும் கலந்துகொண்டிருந்தார்.
முன்னாள் நிதி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் விநியோகிக்கப்பட்ட திறைசேரி முறிகள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளன. 2015 ஜனவரி முதலாம் திகதியென பின் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திறைசேரி மோசடி குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மத்திய வங்கியின் அதிகாரிகள் தனது கையொப்பத்தை மோசடியாகப் பயன்படுத்தியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி குற்றஞ்சாடியிருப்பதுடன், இதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதாகவும் கூறியுள்ளார்.
அவர் நீதிமன்றம் செல்வதன் ஊடாக பல உண்மைகள் வெளிவரும். நீதி யார் பக்கம் என்பது அப்போதே புலப்படுமென நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். திறைசேரி முறி விநியோக விவகாரத்தை முற்றிலும் வேறு பக்கத்துக்குத் திருப்பி நிலைமைகள் மோசமடையச் செய்யப்பட்டன. கடந்த கால அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட குழப்பமான நடைமுறைகளாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதுவாக இருந்தாலும், தமது அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட திறைசேரி முறிகள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. எனவே, இதற்கான கொடுப்பனவுகள் பற்றி எவரும் அச்சம் கொள்ளவோ அல்லது கலவரமடையவோ தேவையில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட சம்பவத்தின் பின்னரான நிலைப்பாடுகளில் முன்னேற்றம் காண்பது குறித்து மத்திய வங்கி ஆராய்ந்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
அரசாங்க பங்குகள் குறித்த சட்டத்தின் கீழ் கடன்தேவைகளுக்காக விநியோகிக்கப்படும் திறைசேரி முறிகள் பற்றிய விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட வேண்டும். எனினும், சந்தையில் காணப்படும் போட்டித் தன்மை காரணமாக வருடமொன்றில் விநியோகிக்கப்பட்ட திறைசேரி முறிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அந்த வருட இறுதியில் வெளியிடப்படுவது வழமையாக இருந்து வருகிறது. எனினும், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ெவளியிடப்பட வேண்டிய வர்த்தமானி அறிவித்தல் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதமே வெளியிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply