வங்காளதேசத்தில் வெளிநாட்டினரை கொல்ல தூண்டிய பயங்கரவாதி கைது

முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்ட நாடாக வங்காளதேசம் இருந்தபோதும், அது ஒரு மதச்சார்பற்ற நாடாகும். ஆனால் அந்த நாட்டில் சமீப காலமாக தொடர்ந்து மதச்சார்பற்ற கருத்துகளை வலைத்தளங்களில் எழுதுகிற கட்டுரையாளர்கள், சிறுபான்மையினர், வெளிநாட்டினர், பேராசிரியர்கள் படுகொலை செய்யப்பட்டு வந்தது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டாக்கா ஜெகநாத் பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவரும், வலைத்தள கட்டுரையாளருமான நஜிமுதீன் சமத் (வயது 28) என்பவர், பல்கலைக்கழக வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை 3 பேர் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்து விட்டு தப்பினர். அந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அந்த நாட்டின் வடமேற்கு நகரமான ராஜ்சாஹியில், ராஜ்சாஹி பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர் ரசூல் கரீம் சித்திக் (58), மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.

 

இப்படி தொடர்ந்து நடந்து வந்த கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டறிய வங்காளதேச பயங்கரவாத தடுப்பு போலீசார் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதில் அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாதுல் உல் முஜாகிதீன் பங்களாதேஷின் கிளை அமைப்பான நியோ ஜமாதுல் முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்பின் நிறுவனரான ஷேக் முகமது அபுல் காசிமுக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.

 

மேலும் இவர், டாக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற ஓட்டலில் கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் கொல்லப்பட்டதில் மூளையாக செயல்பட்ட கனடாவின் தமீம் சவுத்ரி, நூருல் இஸ்லாம் மார்ஜன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

 

இவர் டாக்காவில் சென்பாரா பர்பட்டா பகுதியில் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர் மொபைல் வங்கி பண பரிமாற்றம் மூலம் வந்த பணத்தை பெறுவதற்காக வெளியே வந்தபோது போலீசார் கைது செய்தனர்.

 

இவர் பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். மத பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அவர், ‘வெளிநாட்டினரை கொன்றால் அது சொர்க்கத்துக்கு செல்வதை எளிதாக்கும்’ என தனது இயக்கத்தினரை மூளைச்சலவை செய்து வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு போலீஸ் படைத்தலைவர் மோனிருல் இஸ்லாம் கூறியதாவது:-

 

ஷேக் முகமது அபுல் காசிம், தனது இயக்கத்தினரை மூளை சலவை செய்து வெளிநாட்டினரை கொலை செய்ய வழிநடத்தி உள்ளார். அதைத் தொடர்ந்துதான் அவரது இயக்கத்தினர் வெளிநாட்டினரை கொல்வதற்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் தகவல்கள் பெற்று அவரை கைதுசெய்வதற்கு பல முறை முயற்சி செய்து வந்தோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தப்பி விட்டார். இந்த முறை சிக்கிக்கொண்டார்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply