ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட்டு பணம் வசூலிக்கப்படும்: பிச்சைமுத்து பேட்டி
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 கோடி அபராதமும் விதித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். இதைத் தொடர்ந்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. அவர் இறந்து விட்டதால் அவர் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
எனவே அவர் சார்பில் அபராதம் கட்டுவது யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. அவரது சொத்தை விற்றோ அல்லது கடன் வாங்கியோ ரூ.100 கோடி அபராதத்தை கட்டுவோம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் எப்படி வசூலிக்கப்படும் என்பது குறித்து சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தொடக்கம் முதலே சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பிச்சைமுத்து அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
போயஸ் கார்டன் வீடு ஜெயலலிதா 1991 -ல் இருந்து 1996-ம் ஆண்டு வரை அவர் வாங்கிய அல்லது ஆக்கிரமித்த சொத்துக்கள் ஏலம் விடப்படும் வாய்ப்புகள் உள்ளன. போயஸ் கார்டன் வீட்டின் இரண்டு தளங்களின் மீதும் கோர்ட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
ஆனால் 1991-ம் ஆண்டுக்குப் பிறகு கூடுதலாகக் கட்டப்பட்ட 31- ஏ என்ற எண்கொண்ட கட்டிடத்தை பறிமுதல் செய்யலாம். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றை ஏலம் விட்டு அபராதத் தொகையை வசூலிக்கலாம்.
ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முதல் அமைச்சராக இருந்த போது, தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் வாங்கப்பட்ட நிலங்களை ஏலத்தில் விட்டு வசூலிக்கலாம். ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது.
ஆனால், அந்த சொத்து 1991 -ம் ஆண்டுக்கு முன்பே வாங்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த திராட்சை தோட்டத்தை ஏலம் விட இயலாது. செகந்திராபாத்தில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் வீட்டையும் ஏலம் விட இயலாது.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்று ஆராய்ந்து அவற்றை ஏலத்தில் விட்டு அபாரத தொகையை கர்நாடக அரசு வசூலிக்க வேண்டும். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அது கர்நாடக அரசின் பொறுப்பு ஆகும்.
இவ்வாறு பிச்சைமுத்து கூறினார்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தலா ரூ. 10 கோடி அபராதத்தை எப்படி செலுத்துவது என்று அவர்கள் உறவினர்கள் மற்றும் வக்கீல்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply