ஜோர்டானில் 15 தீவிரவாதிகள் இன்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்

ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில மேற்கத்திய நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்ட பின்னர், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டான் நாட்டு அரசும் கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனையை ஒழிப்பதாக அறிவித்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட அந்நாள் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்திருந்தாலும், தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுகளில் கையொப்பம் இடாமல் இருந்து வந்தார்.

இதன் விளைவாக, நாட்டில் கொடும் குற்றங்களும் தீவிரவாத தாக்குதல்களும் பெருகி வருவதாக அந்நாட்டினரில் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்ததால் கொடும் குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்லும் மரண தண்டனை கடந்த 2014-ம் ஆண்டு மீண்டும் அமலுக்கு வந்தது. அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொடும் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் என மொத்தம் 15 பேருக்கு இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு அம்மான் நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், நாட்டின் வடபகுதியில் ஜோர்டான் உளவுத்துறை அதிகாரிகள் ஐந்துபேர் கொல்லப்பட்ட தாக்குதல், இஸ்லாமிய கொள்கைக்கு மாறாக எழுதி வந்ததாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நஹித் ஹத்தாரின் படுகொலை ஆகிய தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையை பத்து குற்றவாளிகள், கொடும் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டிருந்த மேலும் ஐந்து பேர் என மொத்தம் 15 பேருக்கு ஜோர்டான் தலைநகரான அம்மான் நகரின் தெற்கு பகுதியில் உள்ள சுகா சிறையில் இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஜோர்டான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply