ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி உலக மகளிர் தினமான 8-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் அங்கு அனுமதி தராததால் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

 

 

போராட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

 

 

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி.பிரபாகர், ராஜலட்சுமி உள்பட ஏராளமான நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று பேசினர்.

 

 

இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன், தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி, திரைப்பட நடிகர் மனோ பாலா, இயக்குனர் லியாகத் அலிகான், ஸ்டண்ட் நடிகர் கனல் கண்ணன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் இரா.சிவசங்கர் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்துரை வழங்கினர்.

 

 

உண்ணாவிரத போராட்டத்தின் இறுதியாக மாலை 4.50 மணி முதல் 5.20 மணி வரை சுமார் 30 நிமிடங்கள் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

 

 

தர்ம யுத்தம்

 

 

இன்றைக்கு ஒரு தனிப்பட்ட குடும்பம் கட்சியையும், ஆட்சியையும் கபளகரம் செய்யும் அசாதாரண சூழ்நிலை உருவாகியிருக்கிறது. நமது கட்சியையும், ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து வெளியே கொண்டுவந்து மீண்டும் மக்களாட்சிப்படியும், மக்களின் இயக்கமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாம் இந்த தர்ம யுத்தத்தை தொடங்கி இருக்கிறோம்.

 

 

தர்மயுத்தத்தின் தொடக்கம்தான் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம். 75 நாட்கள் ஜெயலலிதா ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றார். சிகிச்சை பெற்றபோது யாரையும் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. தினந்தோறும் நாங்கள் காலையில் சென்று இரவு வரை ஆஸ்பத்திரியிலேயே தான் இருப்போம். ஒரு தடவைக்கூட ஜெயலலிதாவை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.

 

 

சுகாதார செயலாளர் மீது வழக்கு?

 

 

ஜெயலலிதா மாலை 4.30 மணி (டிசம்பர் 5-ந் தேதி) அளவில் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னிடம் 6.30 மணி அளவில் தெரிவிக்கப்பட்டது. உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று, ஜெயலலிதா காலமாகிவிட்டாராமே என்று சொன்னபோது, இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சாக்குப்போக்கு சொல்லி நேரத்தை கடத்தினார்கள்.

 

 

இரவு 11 மணிக்கு காலமாகிவிட்டார் என்ற செய்தியை சொன்னார்கள். அதற்கு முன்னால் 75 நாட்களும் ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? அவர் மரணம் எட்டும் தருவாயில் இருப்பதை எங்களுக்கு எல்லாம் சுகாதாரத்துறை செயலாளர் தெரியப்படுத்தினார்கள் என்று கூறியதாக செய்திகள் வந்திருக்கிறது. எந்த செய்தியும் என்னிடம் தெரிவிக்கவில்லை. இந்த அறிக்கையை வெளியிட்ட செயலாளர் வாபஸ் பெறவில்லை என்றால் அவர் மீது நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.

 

 

விஜயபாஸ்கர் முதல் குற்றவாளி

 

 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ஆல்ரவுண்டர். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் விஜயபாஸ்கர் அவருடைய கையாட்கள் 7 பேரை போட்டு வைத்திருந்தார். 2-வது தளத்தின் ஆரம்பத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஒரு நோட்டு வைத்துக்கொண்டு நிற்பார்கள். யார் வருகிறார்களோ அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து குறிப்பு எடுத்து விஜயபாஸ்கரிடம் கொடுப்பதுதான் அவர்கள் வேலை.

 

 

என்னை பார்த்ததும் விஜயபாஸ்கர் ஆட்கள் பேனாவை உள்ளே வைத்துவிடுவார்கள்.

 

 

நீதி விசாரணை அமைத்தால் முதலில் என்னிடம் தான் விசாரிக்கவேண்டியது வரும் என்று விஜயபாஸ்கர் சொல்கிறார். நான் தானே நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கிறேன். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. விசாரித்தால் தான் புதைந்திருக்கும் உண்மை நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

 

 

முதலில் என்னிடம் விசாரிக்கட்டும். என்ன நடந்தது என்று நான் முதலில் சொல்கிறேன்.

 

 

ஆனால் நீதி விசாரணை நடந்து உண்மையிலேயே உண்மைநிலை வந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் தான். கட்சியையும், ஆட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்ல சசிகலா செய்த சூழ்ச்சிகள் அனைவருக்கும் தெரியும்.

 

 

சதித்திட்டம் நிறைவேறியது

 

 

2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா வெளியேற்றினார். 4 மாதங்கள் கழித்து சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்தார். சசிகலா மன்னிப்பு கடிதத்தில் அரசியலில் ஈடுபடமாட்டேன், ஜெயலலிதாவுக்கு எதிரான சதி திட்டங்கள் தீட்டியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்றும், அவருக்கு எதிராக செயல்பட்டு துரோகம் செய்தவர்கள் உடனான உறவை துண்டித்துவிட்டேன் என்றார். ஆனால் யார்? யார்? அவர் பக்கத்தில் இருக்கிறார்கள் தெரியுமா?

 

 

ஜெயலலிதாவும் மன்னிப்பு கடிதத்தை பெற்றுக்கொண்டு, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற்றார். ஆனால் சசிகலா குடும்பத்தினர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவில்லை. நான் உயிரோடு இருக்கும் வரை சசிகலா குடும்பத்தினரை என் வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்றார் ஜெயலலிதா. நான் உள்பட மூத்த அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகளை ஜெயலலிதா அழைத்து பேசும்போது, சசிகலா உடனோ, அவர் குடும்பத்தினரோடோ யாரும் பேசக்கூடாது, பேசினால் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

 

மன்னிப்பு கடிதத்தில் கூறிய சதித்திட்டம் என்ன தெரியுமா? கட்சியும், ஆட்சியும் குடும்ப கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே. இதை அறிந்து ஜெயலலிதா முன்பு வெளியேற்றினார். ஆனால் அந்த சதித்திட்டம் இப்போது நிறைவேறியிருக்கிறது.

 

 

தியாகம், சபதம்

 

 

ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வரும் வரை நம்முடைய போராட்டம் தொடரும். நம்முடைய கட்சியை சசிகலாவின் பிடியில் இருந்து மீட்கவும், ஆட்சியை சசிகலாவின் குடும்பத்தில் இருந்து மீட்கும் வரையும் இந்த தர்மயுத்தம் ஓயாது.

 

 

அதற்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த இயக்கம் மக்கள் இயக்கமாகத்தான் இருக்கும். இந்த ஆட்சி மக்களாட்சியாகத்தான் இருக்கும் என்ற சபதத்தினை நாம் ஏற்போம். இன்று முதல் அந்த லட்சியத்தை அடைவோம். அனைவரும் ஒன்று கூடி உழைத்து, வெற்றியடைவோம்.

 

 

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

 

 

உண்ணாவிரதம் முடித்து வைப்பு

 

 

ஓ.பன்னீர்செல்வம் பேசி முடித்தவுடன் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது. வடசென்னை ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பழச்சாறுடன் மேடைக்கு வந்தார். அந்த பழச்சாறை ஓ.பன்னீர்செல்வம், இ.மதுசூதனனுக்கு கொடுத்தார். பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இ.மதுசூதனனும் பழச்சாறு கொடுத்தார்.

 

 

முன்னதாக சாரை, சாரையாய் பொதுமக்கள் வந்ததால் உண்ணாவிரத பந்தலில் போடப்பட்ட இருக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதையடுத்து உண்ணாவிரத பந்தலின் எதிர்புறமும் நாற்காலிகள் போடப்பட்டன. சாலையில் அமர்ந்தும் சிலர் போராட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

 

 

போராட்டத்தில் தன்னார்வத்துடன் இளைஞர்கள், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்துவதை வலியுறுத்தும் வகையில் கையெழுத்துகளும் போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் வாங்கப்பட்டன.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply