85 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புதல்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 85 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையாக இந்த முடிவை இலங்கை எடுத்து இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் ராமேசுவரத்தில் இருந்து தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் சென்று கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

 

அப்போது அங்கு அதிவேக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

 

இதில் பிரிட்ஜோ என்ற 21 வயது மீனவர் குண்டுபாய்ந்து பரிதாபமாக உயிர் இழந்தார். சரோன் என்ற இன்னொரு மீனவர் படுகாயம் அடைந்தார்.

 

இதனால் தமிழகம் முழுவதும் மீனவர்கள் இடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

 

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, இந்திய அரசும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தது.

 

அதே நேரம், தங்களுடைய கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும் இலங்கை அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

 

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் விசுவரூபம் எடுத்து இருப்பதால் பதற்றத்தை தணிப்பதற்கு இந்திய அரசும், இலங்கை அரசும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கின. இதைத் தொடர்ந்து கொழும்பு நகரில் நேற்று இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 

அப்போது இரு தரப்பிலும் பரஸ்பரம் தங்களது சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

அதன்படி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேர் விடுதலை செய்யப்படுவார்கள்.

 

இதேபோல் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கைதாகி இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள இலங்கை மீனவர்கள் 19 பேரை இந்திய அரசு விடுதலை செய்யும்.

 

இதுபற்றி இலங்கை அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது உருவாகியுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

 

தமிழக மீனவர்கள் எப்போது இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை ஆவார்கள் என்பது உடனடியாக தெரிய வரவில்லை.

 

எனினும் இவர்கள் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply