ஐ.ம.சு.முவின் ஏனைய கட்சிகளுக்கு தனியான நேரம் ஒதுக்க வேண்டும்:சமல் ராஜபக்‌ஷ

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஐ.தே.கவுடன் இணைந்து செயற்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. எனவே அவர்களுக்கு நாட்டின் முக்கியமான விடயங்கள் குறித்து பேசுவதற்கு வரையறுக்கப்பட்ட நேரமொன்றை சபாநாயகர் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகரும், ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்‌ஷ கோரிக்கைவிடுத்தார்.

அவர்களுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் பாராளுமன்றத்தின் முக்கியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் கூறினார். நேற்றையதினம் பாராளுமன்றத்தில் ஒழுக்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்தபோதே சமல் ராஜபக்‌ஷ இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த இரண்டு நாட்களாக சபையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். எதிர்க்கட்சியைப் பார்க்கும்போது உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைவிட எதிரணியில் உள்ள குழுவின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இக்குழுவின் ஒருவர் என்ற ரீதியில் அவர்களுக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் தொடர்பான பிரச்சினை காணப்படுகிறது.

சபாநாயகரின் செயற்பாட்டை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்பு வழங்குவது எம் அனைவரினதும் கடமையாகும். இக்குழுவில் பல கட்சிகள் இருக்கின்றன.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட இணங்கியுள்ளபோதும் இக்குழுவில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் கடந்த தேர்தலில் எமது கூட்டணியில் போட்டியிட்டாலும், அவர்கள் தனித்தனியான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். சபையில் அவர்களின் நிலைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது உங்கள் கடமையாகும். இதனை செய்தாலே இடையூறுகள் இன்றி சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். இல்லாவிட்டால் சபையின் பிரதான செயற்பாடுகளுக்கு தினமும் குழப்பம் ஏற்படும்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ஐ.தே.கவுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். எனினும், தேர்தலில் எமது கூட்டணியில் போட்டியிட்ட ஏனைய கட்சிகள் இவ்வாறான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுமில்லை, அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படவுமில்லை. எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தி, நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு வரையறுக்கப்பட்ட நேரமொன்றை ஒதுக்கிக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தன்னால் தீர்வு பெற்றுக் கொடுக்க முடிந்தாலும், கட்சிகளுக்குள் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது.

இருந்தாலும் சகலருக்கும் சமமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கே முயற்சியெடுப்பதாகவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply