தமிழ் மக்களுக்கான சிறந்த அரசியல் தீர்வுத் திட்ட ஆலோசனைகளை கிழித்தெறிந்தவர் பிரபாகரன் : அமைச்சர் கருணா அம்மான்
தேசிய இன ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சரான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இணையத்தளம் ஒன்றிக்கு அவரது அமைச்சில் வைத்து அளித்த பேட்டியினை இங்கு முழுமையாகத் தருகிறோம்.
கேள்வி: புலிகள் அமைப்பிலிருந்து விலகி அரசுடன் இணைவதற்கு முன்னர் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த நீங்கள், அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சரான பின்னர் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளீர்களே.. அத்துடன் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தவுடன் உடனடியாகவே நீங்கள் ஏன் அரசுடன் இணையவில்லை?
பதில்: இல்லை. அது தவறான செய்தி. நாம் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியவுடன் புலிகளால் எமக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் எம்மைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆயுதமேந்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதே உண்மை. இவ்வாறு நாம் தெரிவித்த கருத்தே திரிவுபடுத்தப்பட்டிருந்தது.
புலிகள் அமைப்பிலிருந்து நாம் பிரிந்து அரசுடன் உடனடியாகச் சேர்ந்திருந்தால் எம்மைத் துரோகிகள் என மக்கள் தெரிவித்திருப்பர். அவ்வாறான குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்படக் கூடாதென்பதற்காவே நாம் ரிஎம்விபி (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்) என்ற அமைப்பை உருவாக்கி புலிகள் அமைப்பிலிருந்து நாம் விலகியமைக்கான காரணங்களையும் பிரபாகரனின் துரோகத்தனங்களையும் மக்களுக்கு விளக்கிக் கூறினோம். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றியமை தொடர்பிலும் நாம் விளக்கமளித்தோம். இதனை மக்கள் ஏற்றுக் கொண்டனர். இதன் மூலம் எமது நோக்கமும் நிறைவேறியது. இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இரு தேர்தல்களின் போதும் மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தனர்.
கேள்வி: நீங்கள் ரீஎம்விபியிலிருந்து ஏன் வெளியேறினீர்கள்?
பதில்: இலங்கையைப் பொறுத்த வரையில் 15க்கும் மேற்பட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றன. ஆனால் தமிழ் மக்கள் தொடர்பிலோ தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பிலோ பெரும்பாலான கட்சிகளிடம் தெளிவான எந்தக் கொள்கையும் திட்டங்களும் இல்லையென்பது ஒரு கசப்பான விடயமாகும். அத்துடன் பிராந்திய ரீதியான கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டே தேசிய ரீதியான அல்லது பிரதேச ரீதியான அபிவிருத்தியை முழுமையாக அடைய முடியுமா என்பதும் கேள்விக்குரிய விடயம். இது கடந்த கால அனுபவத்தின் வெளிப்பாடுமாகும்.
வெறும் விளையாட்டுக் கழகங்கள் போன்று கட்சிகளை வைத்துக் கொள்வதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. தொடர்ந்தும் பிராந்தியக் கட்சிகளுக்கு ஊடாக நாம் அரசியலை நடத்திச் செல்வதால் தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையிலேயே நாம் ரிஎம்விபி கட்சியிலிருந்து வெளியேறி தேசிய அரசியலில் எம்மைச் சங்கமிக்கச் செய்தோம்.
கேள்வி: உங்களை நம்பி உங்கள் பினனால் வந்த போராளிகள் நிலை என்ன?
பதில்: நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்கு முன்னரே எமது அமைப்பைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகளின் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தினேன். அவர்களுக்குத் தேவையான தொழில் வாய்ப்புகள், தொழில் பயிற்சிகள், வெளிநாட்டு வேளைவாய்ப்புப் போன்றனவற்றை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
எமது அமைப்பைச் சேர்ந்த ஆயிரம் பேர் இதுவரை இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 300 பேர் தற்போது தொப்பிகலைப் பிரதேசத்தில் கடமையாற்றி வருகின்றனர். மேலும் 1500 பேரை இராணுவத்தில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்துள்ளேன்.
இப்போது கிழக்கு மாகாணத்திலுள்ள எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியலங்களின் பாதுகாப்புக்குக்; கூட நாம் இலங்கைப் பொலிசாரின் உதவியையே கோரியுள்ளோம்.
கேள்வி: நீங்கள் இப்படிக் கூறுகிறீர்கள.; ஆனால் கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்னும் ரீஎம்விபி கட்சியை வழிநடத்தித்தானே செல்கிறார்?
பதில்: அவரின் கட்சியிலிருக்கும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கு மேற்படாது. அவர் தற்போது தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்.
கேள்வி: அவரிடம் உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்த்திருக்கலாமே?
பதில்: அவர் அதனை ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டார்.
கேள்வி: நீங்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னரும் பதவியை ஏற்ற பின்னரும் தமிழ் மக்கள் தொடர்பில் ஏதாவது செய்துள்ளீர்களா?
பதில்: ஆம், நான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்னர் பல அமைச்சுகளின் இணைப்பாளரகவிருந்து நல்ல பல விடயங்களைச் செய்துள்ளேன். அதுபோன்று இப்போது எனக்குக் கிடைத்துள்ள அமைச்சு மூலம் தேசிய ரீதியிலேயே நல்ல பணிகளைச் செய்ய முடியுமென எதிர்பார்க்கிறேன். இப்போது கிடைத்துள்ள அமைச்சினை நான் மிகவும் விரும்புகிறேன். சுமார் 25 வருடங்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட வடக்கினையும் கிழக்கினையும் கட்டியெழுப்பக் கிடைத்துள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.
இந்த அமைச்சின் மூலம் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்து பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்க்கவும் முடியும். தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக் கொள்ளும் வகையில் புதியதொரு திட்டத்தினையும் நான் விரைவில் செயற்படுத்தவுள்ளேன். இந்த இரு இனங்களும் இரு மொழிகளையும் கற்பதன் மூலமும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கலாமென்பதே எனது நம்பிக்கை.
கேள்வி: நான்காவது ஈழப் போர் ஆரம்பித்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் படை பல ரீதியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதற்கான காரணம் என்னவாக இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: புலிகளின் இந்தப் பின்னடைவுக்கு நானே பிரதான காரணம். நானும் பெரும் எண்ணிக்கையிலான போராளிகளும் இந்த அமைப்பிலிருந்து வெளியேறியதன் மூலம் அவர்களின் பலம் குறைக்கப்பட்டு விட்டது.
மேலும் புலிகளின் தரப்பில் இப்போது யுத்தமொன்றுக்குத் தலைமை தாங்கிச் செல்லக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். புலிகள் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். இதற்குப் பின்னர் அவர்களால் யுத்தத்தில் வெல்ல முடியாதென்பது எனது திடமான நம்பிக்கை.
கேள்வி: கடந்த காலங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் தெடாடர்பில் சாதமான ஏதாவது விடயத்தை பிரபாகரன் தவற விட்டுள்ளாரா?
பதில்: நிச்சயமாக, இறுதியாக இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில் நானும் கலந்து கொண்டேன். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பெடரல் முறையிலான தீர்வுத் திட்ட ஆலோசனைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. இது தொடர்பான ஆவணங்களிலும் எமது தரப்பில் (புலிகள்) கையொப்பமிடப்பட்டது. அன்ரன் பாலசிங்கம் எனது அழுத்தத்தின் மத்தியில் இதில் கையொப்பமிட்டார்.
கேள்வி: உங்கள் அழுத்தமா?
பதில்: ஆம், இதில் தான் கையொப்பமிட்டால் பிரபாகரனால் தனக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அன்ரன் பாலசிங்கத்திடம் அன்று காணப்பட்டது. இந்த நிலையில் அவரை நான் தைரியப்படுத்தி கையொப்பமிடச் செய்தேன். பின்னர் இலங்கை திரும்பியதும் வன்னி சென்று பிரபாகரனைச் சந்தித்து கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன். அவர் அதனை மகிழ்ச்சியான மனநிலையுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான ஒப்பந்தமொன்றில் அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டமை தொடர்பாக என்னிடம் தனது அதிருப்தியை வெளியிட்டதுடன் அதனைக் கிழித்தெறிந்து விட்டார். இதுவே அவருக்கும் எனக்குமிடையிலான முரண்பாடுகள் ஏற்படக் காரணமுமானது.
அது மட்டுமன்றி தமிழ் மக்கள் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கபட்ட இந்த ஆலோசனையை அவர் நிராகரித்தமை இனப்பிரச்சினை தீர்வில் அவருக்கு அக்கறை இல்லையென்பதனையுமே காட்டியது. பல வருடகால யுதத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்படவேண்டுமென்ற நிலையிலிருந்த போது இவ்வாறு பிரபாகரன் நடந்து கொண்டது முட்டாள்தனமானது.
கேள்வி: நீங்கள் எவ்வாறு தெரிவித்தாலும்; தமிழ் மக்கள் தம்முடன் இருப்பதாகத்தானே புலிகள் கூறுகின்றனர்?
பதில்: தமிழ் மக்கள் அப்படிக் கூறுகின்றனரா இல்லையே?
கேள்வி: எங்களுக்காகத்தான் பிரபாகரன் போராடுகின்றாரென தமிழ் மக்கள் கூறுகிறார்களே?
பதில்: அந்தக் காலம் இப்போதில்லையே. தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்றைய போராட்டமானது தமிழ் மக்களுக்கான போராட்டம் அல்ல. அது பயங்கரவாதத்தின் பக்கம் வழி தவறிச் சென்று விட்டது. புலிகளை முதலில் வெறுத்தவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். மாவட்ட மக்களே. இப்போது அந்த வெறுப்பாப்பானது பரவிக் காணப்படுகிறது.
கேள்வி: அப்படியாயின் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வுதான் என்ன?
பதில்: மாகாண சபை ஊடான அதிகாரப் பரவலாக்கலே சிறந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றைக் காணமுடியும்.
கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நீங்கள் முழுமையான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச முடியாது.
பதில்: பொலிஸ் அதிகாரத்தின் மூலம்தான் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுமா? பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏனைய சமூகங்கள் தவறாகக் கணிப்பிடக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என்பதனாலேயே இதனை எதிர்க்கிறேன். அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் எதிர்காலத்தில் தமிழ் மொழி பேசும் பொலிசாரே நியமிக்கப்படவுள்ளனர். இந்த நிலையில் பொலிஸ் அதிகாரம் தேவை இல்லையென்பதே எனது கருத்து.
கேள்வி: கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பூரணமாக வழங்கவில்லையென்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான); பகிரங்கமாகத் தெரிவிக்கிறாரே?
பதில்: எதனை எவ்வாறு கையாள்வதெனத் தெரியாத பிள்ளையான் தனது தரப்பிலுள்ள பிழைகளை மறைப்பதற்காக சுமத்தும் குற்றச்சாட்டுகள்தான் இவை. கிழக்கின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான நிதி திருப்பியனுப்பப்பட்டமைக்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஹில்புல்லாஹ் கிழக்கு மாகாண அமைச்சர்தானே அவரும் அதே மாகாண சபை மூலம் எவ்வளவு சேவைகளைச் செய்து வருகிறார். முதலில் நிர்வாகத் திறமை இருக்க வேண்டும் அது இல்லாமல் தாம் விடும் பிழைகளுக்கெல்லாம் பிறரைக் குற்றம் சொல்வது தவறு.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது யுத்த களமுனையில் உள்ளாரா அல்லது வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருப்பாரா?
பதில்: வன்னிப் பெரும் பரப்பிலுள்ள காடொன்றுக்குள் அவர் ஒழிந்துள்ளாராரென்றே நான் கருதுகிறேன். அவரால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது கடினம். அப்படித் தப்பிச் சென்றாலும் இந்தியா உட்பட பல நாடுகள் அவரை ஏற்றுக் கொள்ளமாட்டாது. இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கை விவகாரம் தொடர்பில் எல்லாம் முடிந்த கதை. அவர்கள் தங்களது கொள்கையிலிருந்து மாறவும் மாட்டார்கள். யாராலும் அவர்களை மாற்றவும் முடியாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply