விமல் வீரவன்சவின் மீள்பரிசீலனைக்கான பிணை விண்ணப்பம் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) நிராகரித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி முன்னிலையில் விமல் வீரவன்சவின் பிணை கோரிக்கை இன்று (21) ஆராயப்பட்டது. அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்காக ஜனாதிபதி செயலகத்தினால் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட 40 வாகனங்களை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் செயற்பட்டாளர்களுக்கு வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 9 கோடியே 18 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரச நிதியை மோசடி செய்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விமல் வீரவன்சவின் மீள் பரிசீலனைக்கான பிணை விண்ணப்பத்தை, கட்டணமின்றி நிராகரிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, கோட்டை நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தமது பிணை விண்ணப்பத்தை கோட்டை நீதவான் நிராகரித்ததாக, மீள்பரிசீலனைக்கான பிணை விண்ணப்பத்தில் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
விமல் வீரவன்சவின் மீள்பரிசீலனை பிணை விண்ணப்பத்தை இன்று ஆராய்ந்த பின்னர், கோட்டை நீதவானால் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை சட்டபூர்வமானது என்பதால், அதனை இரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இல்லையென்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply