கேப்பாப்புலவு பிரச்சினைக்கு இரண்டு தினங்களில் தீர்வு : அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகள் விடுவிப்புத் தொடர்பில் இரண்டு தினங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என சிறைச்சாலைகள் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், கேப்பாபுலவு காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதது குறித்து கேள்வியெழுப்பினார். இதன்போது குறுக்கீடு செய்த அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்ட பதிலை வழங்கினார்.
தானும், டொக்டர் சிவமோகன் எம்பியும் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து கேப்பாபிலவு காணி விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், காணி விடுவிப்பு தொடர்பில் இரு தினங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, யாழ் வலி வடக்கு, இரணைமடு, கேப்பாபுலவு போன்ற பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிடியில் இருப்பதாக சிறிதரன் எம்பி சபையில் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்த அவர்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இதுஇவ்விதமிருக்க, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்தும் சிறிதரன் எம்பி சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 94 தமிழ் அரசியல் கைதிகள் எதுவித விசாரணையும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாவிட்டால் பிணையிலாவது விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பல கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் 43 கைதிகளே எஞ்சியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணையை முன்னெடுத்த பின்னரே அவர்களை விடுவிக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply