ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யா பயணம்
ரஷ்ய அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ரஷ்யா நோக்கி பயணமானார். இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் 1990 ஆம் ஆண்டு முதற்பகுதி வரை இடம்பெற்ற பனிப்போர் வரையிலும் இலங்கை, அணிசேரா கொள்கைகளை பின்பற்றியதுடன், எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் ரஷ்யா அடங்கிய சோவியத் குடியரசுடன் இலங்கை நெருங்கிய நட்புறவைப் பேணியிருந்தது.
இதன் ஊடாக இலங்கையின் கைத்தொழில் துறைக்கு ரஷ்யா பாரிய ஒத்துழைப்பு வழங்கியது.
இலங்கையின் தேயிலை கொள்வனவாளர்களில் இன்றும் ரஷ்யா முதன்மை வகிக்கின்றது.
1974 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பின்னர் இலங்கை அரசத் தலைவர் ஒருவர் ரஷ்யாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அண்மையில் நடைபெற்ற கோவா மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தமது நாட்டிற்கு வருகைத் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது அந்நாட்டு அரசாங்கத்தின் பல சிரேஷ்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையே வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்லுதல் உள்ளிட்ட நீண்ட கால இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.
கடற்றொழில், சுற்றுலாத்துறை, கலாசாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகள் சிலவும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உத்தியோகப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply