அமெரிக்காவில் முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வாலிபர் பலி
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள யாகிமா நகரில் உள்ள மிக பரபரப்பான “AM-PM” என்ற பெட்ரோல் பங்கில் இந்தியாவை சேர்ந்த விக்ரம் ஜர்யால்(28) என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், நேற்று இந்த பெட்ரோல் பங்குக்கு முகமூடி அணிந்து வந்த இரு கொள்ளையர்கள் அங்கு பணம் வசூலிக்கும் கவுன்ட்டரில் அமர்ந்திருந்த விக்ரம் ஜர்யாலை தாக்கிவிட்டு, பணத்தை அள்ளிச் செல்ல முயன்றனர். அவர்களை எதிர்த்துப் போராடிய விக்ரமை நோக்கி அவர்கள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இதனால், பீதியடைந்த விக்ரம் பணத்தை எடுத்து கொள்ளையர்களிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுகொண்ட கொள்ளையர்களில் ஒருவன் மிக அருகாமையில் இருந்தவாறு விக்ரம் மீது அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விக்ரமை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை தொடங்கிய சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான விக்ரம் ஜர்யால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ள நிலையில், இந்த படுகொலை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கவலை தெரிவித்துள்ளார்.
விக்ரம் ஜர்யாலின் பிரேதத்தை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உதவ வேண்டும் என்று டுவிட்டர் மூலம் அவரது மூத்த சகோதரர் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று, இதுதொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தலைமை தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் ஜர்யால் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வாஷிங்டன் நகர போலீசார், பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply