பொலிஸார் கேட்காமலேயே இலஞ்சம் கொடுக்கிறார்கள் யாழ்ப்பாணச் சாரதிகள் – மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு
யாழ்ப்பாணத்தில் சில பொலிஸார் இலஞ்சப் பணத்தைக் கேட்பதற்கு முன்னரே சாரதிகள் தாமாக முன்வந்து இலஞ்சம் கொடுக்க முயல்கிறார்கள். ஆயினும் பொலிஸார் இலஞ்சம் வாங்கும் செயலில் ஈடுபடக்கூடாது என யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார்.
போக்குவரத்துப் பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப் பணத்தின் வெகுமதித் தொகையை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இங்குள்ள சாரதிகளை நான் நன்கு அறிவேன். சட்ட மீறலுக்காகத் தண்டப் பணத்தை அறவிட முற்படும்வேளையில் பொலிஸார் கேட்காமலேயே சாரதிகள் பணத்தை இலஞ்சமாகக் கொடுக்கும் நிலமை காணப்படுகின்றது. பொலிஸார் இலஞ்சம் என்ற விடயத்துக்குள் போகக்கூடாது. இலஞ்சம் மூலம் பணம் சம்பாதிப்பீர்களாயின் உங்கள் குடும்பத்தை இழக்க நேரிடும்.
உங்கள் வாழ்க்கையை இழந்து-சந்தோசங்களை இழந்து சிறைக்குச் செல்ல நேரிடும்.
இலஞ்சம் வாங்கிப் பெரிய வீடுகள் கட்டிய சில உத்தியோகத்தர்களை நான் அவதானித்துப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் தங்களின் வீடுகள், குடும்பங்கள் எல்லா வற்றையும் இழந்து பதவியையும் இழந்து இருக்கின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. எனவே உங்களுக்கு வழங்கப்படும் மாதாந்தச் சம்பளப் பணத்துடன் உங்கள் குடும்ப வாழ்க்கையை நடத்துங்கள். அவ்வாறு செய்வீர்கள் ஆயின் உங்கள் வாழ்க்கை சந்தோசமான வாழ்க்கையாக அமையும்.
போக்குவரத்து விதி மீறல்கள் இடம்பெறும்போது அந்த இடத்திலேயே தண்டப் பணத்தை அறவிடுங்கள். அதனை விடுத்துப் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லாதீர்கள். அப்படி அழைத்துச் செல்லும்போது அங்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வந்து நீங்கள் இலஞ்சம் வாங்கியதை உறுதிப்படுத்திப் பிடித்தால் அதன் பின்னர் சிறையில் தான் இருக்கவேண்டி வரும். அவ்வாறு நடந்தால், எங்களைப் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் தான் இழுக்கு ஏற்படும்.எனவே இவற்றை எல்லாம் உணர்ந்து செயற்படுங்கள் – என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply